கடந்த 16 மாதங்களாக, உக்ரைன் போர் உலக அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தி  வருகிறது. அதில் திடீர் திருப்பமாக ரஷியா ஆதரவு கூலிப்படை ரஷியா ராணுவத்திற்கு எதிராகவே திரும்பியது. இதை தொடர்ந்து, ரோஸ்டோவ் நகரை கூலிப்படையினர் கைப்பற்றினார்கள்.
உச்சக்கட்ட பரபரப்புக்கு மத்தியில், ரிஷிய நாட்டு ராணுவ தலைமையை கவிழ்க்க போவதாக வாக்னர் கூலிப்படை எச்சரிக்கை விடுத்தது.


உக்ரைன் போரில் நடந்த திருப்பம்:


ரஷிய தலைநகர் மாஸ்கோவை நோக்கி படையெடுத்து செல்ல, தனியார் ராணுவ அமைப்பான வாக்னர் கூலிப்படைக்கு அதன் தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் உத்தரவிட்டார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், உத்தரவு பிறப்பித்த வேகத்துடனேயே அதனை திரும்ப பெற்றார் வாக்னர் கூலிப்படை தலைவர் பிரிகோஜின்.


கிளர்ச்சியை தொடர்ந்து, அன்று இரவே நடந்த ரகசிய பேச்சுவார்த்தையில் ரஷிய அரசுக்கும் வாக்னர் கூலிப்படைக்கும் சுமூகமான தீர்வு ஏற்பட, நாட்டை விட்டு செல்ல பிரிகோஜின் ஒப்பு கொண்டார். அதற்கு பலனாக, அவருக்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து வழக்குகளும் முடித்து வைக்கப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால், பிரிகோஜின் எங்கு உள்ளார் என்பது தொடர் மர்மமாகவே இருந்து வந்தது.


புதினை சந்தித்த வாக்னர் கூலிப்படை தலைவர்:


இந்த நிலையில், பிரிஜோஜின் தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. கிளர்ச்சி நடைபெற்ற ஐந்தே நாள்களில் புதினை வாக்னர் கூலிப்படை தலைவர் பிரிகோஜின் சந்தித்ததாக ரஷியா அரசு தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் மாதம், 29ஆம் தேதி இந்த சந்திப்பு நடந்துள்ளது.


இதுகுறித்து ரஷிய அரசின் செய்தித்தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், செய்தியாளர்களிடம் பேசுகையில், "35 பேரை கூட்டத்திற்கு அழைத்திருந்தார் புதின். இதில், படைப்பிரிவு தளபதிகளும் அடங்குவர். இந்த சந்திப்பு மூன்று மணி நேரத்திற்கு மேல் நீடித்தது. புதினிடம் வாக்னர் தளபதிகள் தாங்கள் அவருடைய வீரர்கள் என்றும் அவருக்காக தொடர்ந்து போராடுவோம் என்றும் கூறினார்கள்" என்றார்.


ரஷிய அரசுக்கும் வாக்னர் கூலிப்படைக்கும் இடையே நிலவிய பிரச்னையை முடிவுக்கு கொண்டு வருவதில் முக்கிய பங்காற்றியவர் பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ. உள்நாட்டு போரை தவிர்க்க உதவியதற்காக பெலாரஸ் நாட்டின் ராணுவத்திற்கும் பாதுகாப்பு படையினருக்கும் புதின் நன்றி தெரிவித்திருந்தார்.


பின்னர், கிளர்ச்சி குறித்து விளக்கம் அளித்த பிரிஜோஜின், "கிளர்ச்சியானது அரசாங்கத்தை கவிழ்ப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை. மாறாக ராணுவம் மற்றும் பாதுகாப்புத் துறை தலைவர்களின் தவறுகளுக்காகவும் உக்ரேனில் அவர்கள் நடந்து கொண்ட விதத்திற்காகவும் நடத்தப்பட்டது" என்றார்.


ரஷியா அரசு, வாக்னர் கூலிப்படைக்கு இடையே நடந்த ஒப்பந்த விதிமுறைகளின்படி, பிரிகோஜின் பெலாரஸுக்குச் செல்லவிருந்தார். ஆனால், கடந்த வாரம் அவர் ரஷியாவுக்குத் திரும்பிவிட்டதாக பெலாரஸ் அதிபர் தெரிவித்திருந்தார். வாக்னர் போராளிகள் பெலாரஸுக்கு இடம்பெயர்வதற்கான முடிவை இன்னும் எடுக்கவில்லை என்றும் கூறினார்.