கடந்த சில நாட்களுக்கு முன்பு, ரஷ்யாவிற்கு சில ஆயிரம் கிலோ மீட்டர்கள் தூரம் வரை ரகசியமாக ஊடுருவி, விமானப் படைத்தளங்கள் மீது ட்ரோன் தாக்குதலை நடத்தியது உக்ரைன். உலக நாடுகளையே திரும்பிப் பார்க்க வைத்த இந்த நிகழ்விற்கு, பதிலடி கொடுத்தே ஆக வேண்டும் என்று ரஷ்ய அதிபர் புதின் உறுதியாக கூறியுள்ளதாக, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அவர் கூறியது என்ன.? பார்க்கலாம்.

Continues below advertisement

ட்ரம்ப்பிடம் ரஷ்ய அதிபர் புதின் பேசியது என்ன.?

ரஷ்யா - உக்ரைன் இடையே பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ரஷ்ய அதிபர் புதினிடம் தொலைபேசி வாயிலாக, ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பேசியதாக தெரிவித்துள்ளார். அப்போது, ரஷ்ய விமானப்படை தளங்கள் மீது உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதல் குறித்தும், இரு தரப்பினரும் நடத்திவரும் தாக்குதல்கள் குறித்தும் பேசியதாக ட்ரம்ப் கூறியுள்ளார்.

மேலும், இருவரும் நன்றாகத் தான் பேசியதாகவும், ஆனால் உடனடியாக அமைதி ஏற்பட அது வழிவகுக்காது என்றும் கூறியுள்ள ட்ரம்ப், உக்ரைனின் ட்ரோன் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்தே ஆக வேண்டும் என்று ரஷ்ய அதிபர் உறுதிபட தெரிவித்ததாக கூறியுள்ளார்.

Continues below advertisement

ரஷ்யாவிற்குள் ஊடுருவி 2 முறை தாக்குதல் நடத்திய உக்ரைன்

முன்னதாக, கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று, ரஷ்யாவின் எல்லைக்குள் மிக ஆழமாக புகுந்து ட்ரோன் தாக்குதல் நடத்தி, 41 போர் விமானங்களை சேதப்படுத்தியது உக்ரைன். ரஷ்யாவின் 5 ராணுவ விமான தளங்கள் அடுத்தடுத்து தாக்கப்பட்டன. இதில், உக்ரைன் மீது நீண்ட தூர ஏவுகணைகளை ஏவ மாஸ்கோ பயன்படுத்திய Tu-95 மற்றும் Tu-22 போன்ற  குண்டுவீச்சு விமானங்கள், A-50 ராடார் மற்றும் கட்டளை விமானம் ஆகியவை தாக்கப்பட்டவற்றில் அடங்கும்” என்று தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலை ரஷ்யாவும் உறுதிப்படுத்தியது.

ஆபரேஷன் ‘Spider's Web‘

உக்ரைனிலிருந்து பல ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ரஷ்யாவின் முக்கிய விமானப்படை தளங்கள் மீது நடத்தப்பட்ட இந்த ட்ரோன் தாக்குதல், ஆபரேஷன் ‘Spider's Web‘ என்ற பெயரில், உக்ரைனால் நடத்தப்பட்டதாக தகவல் வெளியானது. இந்த தாக்குதலுக்காக ஒன்றரை வருடங்கள் திட்டமிடப்பட்டதாக, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார். இந்த பிரமாண்ட தாக்குதலுக்காக 117 ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டதாகவும், அவை திட்டமிடப்பட்ட நிலைகளில் இருந்த கப்பலில் இருந்து ஏவுகணைகளை சுமந்து சென்று தாக்கக்கூடிய ரஷ்யாவின் விமானங்களில் 34 சதவீத விமானங்களை அழித்ததாகவும் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

இந்த ட்ரேன்கள், மரத்தாலான மேற்கூரைகளைக் கொண்ட ட்ரக்குகளில் வைக்கப்பட்டு, முன்கூட்டியே ரஷ்யாவிற்குள் ரகசியமாக, ரஷ்ய விமானப்படைத் தளங்களுக்கு அருகே எடுத்துச் செல்லப்பட்டதாக உக்ரைன் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. தாக்குதலின்போது, ரிமோட் மூலம் மர மேற்கூரைகள் திறக்கப்பட்டு, ட்ரோன்கள் பறக்க விடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கிரிமியா பாலத்தை சிதைத்த உக்ரைன்

இந்த நிலையில், அடுத்த நாளே மீண்டும் மிகப்பெரிய தாக்குதல் ஒன்றை நடத்தி ரஷ்யாவில் இருந்து கிரிமியா செல்லும் பாலத்தை வெடி மருந்துகள் மூலம் தகர்த்துள்ளதாக உக்ரைன் தெரிவித்தது. தண்ணீருக்கு அடியில் செல்லும் ரோபோக்கள் மூலமாக 1100 கிலோ வெடிபொருட்கள் பாலத்தின் தூண்களில் பொருத்தப்பட்டதாகவும், பின்னர், அவை வெடிக்க வைக்கப்பட்டதாகவும் உக்ரைன் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

இந்த பாலம், ரஷ்யாவில் இருந்து கிரிமியா தீபகற்பத்தை இணைக்கும் முக்கியமான போக்குவரத்து வழித்தடமாக உள்ளது. பாலத்தின் சில பகுதிகள் சேதமடைந்ததால், ரஷ்ய படைகளுக்கு தேவையான ஆயுதங்கள், தளவாடங்களை கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

உக்ரைனின் இந்த தாக்குதல்கள் ரஷ்ய அதிபர் புதினுக்கு நிச்சயம் கடும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கும். தற்போது, பதிலடி கொடுக்கப் போவதாக வேறு கூறியுள்ளார். ரஷ்யாவின் அடியை உக்ரைன் தாங்குமா என்பதே தற்போதைய கேள்வி.