''போர் ஒரு பைத்தியக்காரத்தனம். உங்களுடைய ஆயுதங்களைக் கீழே போடுங்கள். போரில் ஈடுபடுவோர் மானுடத்தை மறந்துவிடுகிறார்கள். துப்பாக்கிகளை அமைதிப்படுத்துங்கள். குழந்தைகளின் எதிர்காலத்தைச் சூனியமாக்கி விட்டீர்கள்.
பொம்மைகளை ஏந்த வேண்டிய கைகளில், போரின் கொடுமைகளைத் தருகிறீர்களா? சிரிப்பது என்றால் என்னவென்றே தெரியாமல் குழந்தைகள் வளர வேண்டுமா?''- பாலஸ்தீன் மற்றும் உக்ரைன் போர் பற்றிய போப் பிரான்சிஸின் குரல் இது. வலிகள் நிறைந்த இந்த வரிகளை யாராலும் அத்தனை எளிதாகக் கடக்க முடியாது.
யுத்தம், வெள்ளம், வறட்சி என எத்தகைய பேரிடர்களை மானுட சமூகம் எதிர்கொண்டாலும், அதில் முதலில் பாதிக்கப்படுவது குழந்தைகளே. போரோ, வெள்ளமோ அவை ஏற்படும் காலகட்டத்தில் மட்டும் குழந்தைகள் பாதிப்பை எதிர்கொள்வதில்லை. அதன் தாக்கம் அவர்களின் வாழ்நாள் முழுமைக்குமே தீராத வடுவாகத் தங்கிவிடுகிறது. போரால், இயல்பை மறந்து நடைபிணமாக வாழும் குழந்தைகளும் இருக்கிறார்கள். இது அவர்களின் குழந்தைமையை அடியோடு சிதைத்துவிடுகிறது.
தொடர்ந்து போர் நடக்கும் ஆப்கானிஸ்தானிலும் பாலஸ்தீனத்திலும்கூடக் குழந்தைகளின் குரல்கள் கேட்கப்படாமலேயே இருக்கின்றன. வறுமை நிலையும் அவர்களைக் கடுமையாக பாதிக்கிறது.
8 ஆண்டுகளாய்த் தொடரும் பதற்றம்
ஐரோப்பியக் கண்டத்தில் ரஷ்யாவுக்குப் பிறகு இரண்டாவது பெரிய நாடு உக்ரைன். அங்கு சுமார் 4.4 கோடி மக்கள் வசிக்கின்றனர். இதில் 14 சதவீதம் பேர் குழந்தைகள். அதாவது உக்ரைனில் சுமார் 62 லட்சம் குழந்தைகள் வசிக்கின்றனர். கடந்த 8 ஆண்டுகளாகவே இவர்கள் போர்ச் சூழலில்தான் வாழ்ந்து வருகின்றனர். 2014-ல் க்ரீமியாவில் நடைபெற்ற போரால் உக்ரைன் தொடர்ந்து பதற்ற நிலையிலேதான் இருந்து வந்தது. குண்டு வீசுதல் வழக்கமான ஒன்றானது. இதனால் குழந்தைகள் வன்முறைகளுக்கு ஆளாகினர். அவர்களின் படிப்பு தடைபட்டது.
தற்போது ரஷ்யத் தாக்குதல் காரணமாக, குழந்தைகள் இன்னும் கூடுதலாக பாதிக்கப்பட்டுள்ளனர். போர் அறிவிப்பு வந்த பிப்ரவரி 23ஆம் தேதிக்குப் பிறகு உக்ரைனில் உள்ள குழந்தைகள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். உணவு, தண்ணீர், சுகாதாரப் பொருட்கள், பண உதவி மற்றும் உளவியல் ஆதரவு உள்ளிட்ட அன்றாட வாழ்வுக்குத் தேவையான அனைத்துக்குமே பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் உக்ரைன் மக்கள், குழந்தைகளோடு கொத்துக்கொத்தாக அண்டை நாடுகளுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்து வருகின்றனர். இவ்வாறு இடம்பெயர்வோரின் எண்ணிக்கை 5 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
பயங்கர ஆயுதங்கள், பயமுறுத்தும் குளிர்
ரஷ்யா பொழியும் குண்டுமழையால் 15 லட்சம் குழந்தைகள் வீட்டைவிட்டு வெளியேறி உள்ளனர். பயங்கர ஆயுதங்கள், பயமுறுத்தும் குளிர், பசி, தாகத்தால் குழந்தைகள் செய்வதறியாது தவிக்கின்றனர். போக்கிடம் இல்லாமல் போர் ஆபத்துள்ள பகுதிகளிலேயே, 4 லட்சம் குழந்தைகள் வாழ்கின்றனர்.
கற்றல் இழப்பு
கிழக்கு உக்ரைனில் ரஷ்ய ராணுவ நடவடிக்கைகள் தீவிரமடைந்தபிறகு கோர்லோவ்கா பகுதியில் உள்ள பள்ளியில் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 3 குழந்தைகளும் 2 ஆசிரியர்களும் கொல்லப்பட்டனர். தொடர்ந்து ருமேனியா வழியாக மக்கள் தங்களின் குழந்தைகளுடன் வெளியேறிக்கொண்டே இருக்கின்றனர். பலர் கடுங்குளிரிலும் கால்நடையாகவே எல்லையைக் கடக்கின்றனர். இல்லையெனில் தங்களை ரஷ்யத் துப்பாக்கிகளும் கண்ணிவெடிகளும், ஆயுதங்களும் வெடிபொருட்களும் கொன்றுவிடும் என்பது அவர்களுக்குத் தெரியும்.
குழந்தைகள் வாழ்வதற்கான உரிமை, பாதுகாப்புக்கான உரிமை, முன்னேற்றத்துக்கான உரிமை, பங்கேற்புக்கான உரிமை என குழந்தைகளுக்கு 4 விதமான உரிமைகள் உண்டு. அவை அனைத்துமே யுத்தத்தால் மீறப்படுகின்றன. இது குழந்தைகளின் சிறந்த நலனுக்கு எதிரானது என்கிறார் குழந்தை உரிமைகள் செயற்பாட்டாளர் தேவநேயன். போர்ச் சூழலில் வாழும் குழந்தைகளின் நிலை குறித்து விளக்கமாகப் பேசுகிறார்.
''பட்டாசு வெடித்ததா, குண்டு வெடித்ததா என்பதே அறியாத இளம்பிஞ்சுகள் அவர்கள். அவர்களிடம் போரைத் திணிப்பதே வன்முறைதான். வாழ்க்கையில் திரும்பக் கிடைக்காத, மீட்டெடுக்க முடியாத பருவம் குழந்தைகளுடையது. அதை ஒருங்கிணைந்து உறுதிசெய்ய வேண்டியது அவசியம்.
1945-ல் இரண்டாம் உலகப் போரின்போது வீசப்பட்ட குண்டுகளால், இன்றும் அங்கு குழந்தைகள் மாற்றுத்திறனாளிகளாகவோ, மனநலம் பாதிக்கப்பட்டோ பிறக்கின்றனர். போர், அது நடக்கும் காலகட்டத்தில் மட்டுமல்ல, தலைமுறை தாண்டி தாக்கத்தை ஏற்படுத்துகிறது. போர்ச் சூழலில் வளரும் குழந்தைகளின் உடலும் மனதும் வளர்ச்சி குறைவாகவே இருக்கும். யாரைப் பார்த்தாலும் பயப்படுவார்கள். தனிமையை விரும்புவார்கள். படிப்பில் நாட்டம் இருக்காது. மற்றவர்களைக் குற்றப் பார்வையிலும் அச்சப் பார்வையிலும் பார்ப்பார்கள்.
தினசரி 300 பேர் பலி
போரில் பெற்றோரை இழக்கும் குழந்தைகள் கூடுதலான பாதிப்பைச் சந்திக்கிறார்கள். என்னதான் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும் பெற்றோரின் அரவணைப்பு இல்லாத குழந்தைகளின் வளர்ச்சி கல்வி, ஆளுமைத்திறன் பாதிக்கும் மேல் குறைகிறது. பாடம் இழப்பு, நண்பர்கள் இழப்பு, சூழல் இழப்பு ஆகியவற்றைக் குழந்தைகள் அவர்கள் விரும்பாமலேயே, அறியாமலேயே எதிர்கொள்கின்றனர்'' என்கிறார் தேவநேயன்.
உலகம் முழுவதிலும் உள்ள போர்ப் பகுதிகளில் வாழும் குழந்தைகளில் 300 பேர் தினந்தோறும் பலியாவதாகவும், சுமார் 42 கோடி குழந்தைகள் ஆபத்தான பகுதிகளில் வாழ்ந்து வருவதாகவும் அதிர்ச்சிப் புள்ளிவிவரத்தை முன்வைக்கிறது ’சேவ் த சில்ரன்’ அமைப்பு.
குழந்தைத் தொழிலாளர்கள்
பொருளாதார இழப்பும் குழந்தைகளையே அதிகம் பாதிக்கிறது. வறுமை, பசி, பட்டினி, ஊட்டச்சத்துக் குறைவு ஆகியவற்றைக் குழந்தைகள் எதிர்கொள்கின்றனர். இது அவர்களைக் குழந்தைத் தொழிலாளர்களாக மாற்றுகிறது. வன்முறைச் செயல்களுக்குப் பழக்குகிறது. இவையனைத்தும் போரின் நீண்டகால விளைவுகள்.
போரில் நேரடியாக சிக்கி மாற்றுத்திறனாளிகள் ஆகும் குழந்தைகளும் உண்டு. ஊனத்தை உடலிலும் வடுவை நெஞ்சிலும் சுமந்துகொண்டு வாழ்பவர்கள் அநேகம்பேர்.
நீளும் துயரங்கள்
பள்ளிக் கல்வி இழப்பு, கல்லூரி, பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி கற்பதற்கான வாய்ப்புகளை அழித்துவிடுவது, மதிப்பெண் சான்றிதழ்கள், ஆவணங்கள் இழப்பு, பெற்றோரை இழந்து அநாதரவாக நிற்கும் சூழல், பொருளாதார இழப்பு உள்ளிட்ட பல துயரங்களைக் குழந்தைகள் தாங்கிக்கொள்ள வேண்டியுள்ளது.
யுத்தம் காரணமாக அன்றாடத் தேவைகளைக் குழந்தைகள் பூர்த்தி செய்ய முடியாத சூழலில், அதைக் காட்டிலும் அதிக அச்சுறுத்தல்களை அவர்கள் எதிர்கொள்கின்றனர். இதுகுறித்து உலக சுகாதார நிறுவனம் பல்வேறு தகவல்களை அளித்துள்ளது.
போரில் குழந்தைகள், குழந்தை வீரர்களாக (Child Soldiers) பயன்படுத்தப்படுகின்றனர். சமையல்காரர்களாகவும், சுமை தூக்கிகளாகவும் செய்தியைப் பரிமாற்றம் செய்பவர்களாகவும் பணிபுரியக் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். பல நேரங்களில் ஒற்றர்களாகவும் அவர்கள் பயன்படுத்தப்படுகின்றனர். எல்லாவற்றுக்கும் மேலாகப் பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை (rape), பிற கடுமையான பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.
குழந்தைகள் கொலை, ஊனம், கடத்தல், பாலியல் வன்முறை ஆகியவை சர்வசாதாரணமாக நடைபெறுகிறது. 2005 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் 1 லட்சத்து 4 ஆயிரத்து 100 குழந்தைகள் போர் முனையில் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் ஊனமாக்கப்பட்டுள்ளனர். இதே காலகட்டத்தில் 93 ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைகள் ராணுவத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டு, குழந்தை வீரர்களாகப் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். உண்மையில் இந்த எண்ணிக்கை இன்னும் மிக அதிகம் என்றே கூறப்படுகிறது. பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளில் தாக்குதல் நடத்தப்படுவதால் அவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது.
குழந்தைகள் கடத்தல்
சட்டவிரோதமாகக் குழந்தைகளைக் கடத்துதல், தூக்கிச் செல்லுதல் ஆகியவையும் போர்ச் சூழலில் நடக்கின்றன. மேற்குறிப்பிட்ட 15 ஆண்டு காலகட்டத்தில் 25,700 குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளனர்.
நூற்றாண்டு காலமாக பெரும்பாலான நாடுகளின் போர்முனையில் பாலியல் தொழிலில் ஈடுபடக் கட்டாயப்படுத்துதல், பாலியல் அடிமைகளாக நடத்துதல், கட்டாயத் திருமணம், கர்ப்பம், கட்டாய கருத்தடை, பாலியல் சுரண்டல் மற்றும் குழந்தைகளை துஷ்பிரயோகம் செய்தல் ஆகியவை சர்வசாதாரணமாக நடந்து வருகிறது. 2005 முதல் 2020 வரை இதுபோல 14,200 பேர் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இத்தகைய பாலியல் துன்புறுத்தல்களுக்கு 97% பெண் குழந்தைகளே பலியாடாகின்றனர். இந்தப் புள்ளிவிவரங்களை உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
என்ன செய்யலாம்?
முதலில் குழந்தைகளுக்கு நம்பிக்கையை அளிக்க வேண்டும். அவர்களுக்கான உணவு, இருப்பிடம், கல்வி உள்ளிட்ட உரிமைகளை உறுதி செய்ய வேண்டும். மகிழ்வான சூழலை அளிக்க வேண்டும் என்கிறார் தேவநேயன்.
போர்க் காலத்தில் ஸ்ட்ரெஸ் ஹார்மோன்கள் என்று சொல்லப்படும் கார்டிசால் ஹார்மோன் சுரப்பதால் குழந்தைகள் பல்வேறு சிக்கல்களுக்கு ஆளாவதாகச் சொல்கிறார் உளவியல் மருத்துவர் மோகன வெங்கடாசலபதி. ''இந்த ஹார்மோன் சுரப்பால் சிறு சத்தம் கேட்டாலே அச்சப்படுவது, மனச்சோர்வு, பதற்றம், நிலையில்லாமல் இருப்பது, தூக்கமின்மை ஆகிய பிரச்சினைகள் ஏற்படும். மனிதன் அபாயத்தில் இருக்கும்போது அதில் இருந்து தப்பிக்க உதவுவதற்காக, உடலில் சுரக்கும் ஹார்மோனே கார்டிசால். போரை எதிர்கொள்ளும் குழந்தைகளுக்கு கார்டிசால் சுரப்பு அதிகமாகிறது.
இந்த சூழலில் குழந்தைகள், PTSD (Post-traumatic stress disorder) எனப்படும் அதிர்ச்சிக்குப் பிறகான உளவியல் பாதிப்புக்குத்தான் முதலில் ஆளாகிறார்கள். விபத்து, கொலை, காயம் உள்ளிட்ட பேரிடர்க்கால சம்பவங்களையும் பாலியல் வன்கொடுமைகளையும் நேரடியாக எதிர்கொள்ளும் குழந்தைகளுக்கு இந்த பாதிப்பு ஏற்படுகிறது. சம்பவம் நடந்து பல நாட்கள் ஆனாலும், அன்று நடந்த துயரத்தை, குழந்தைகள் மீண்டும் நிகழ்காலத் தருணத்தில் வாழ்வதுண்டு. (Reliving) அப்போது மன அழுத்தம் அதிகரிக்கிறது. சுனாமி காலகட்டத்தில் இவ்வாறுதான் நடந்தது.
போர் நடக்கும்போதே உளவியல் ஆலோசனை
போர் சூழலில் இருந்து அகதிகளாகப் பிற நாடுகளுக்குத் தப்பிச் சென்றாலும், அங்கும் பல்வேறு சிக்கல்களைக் குழந்தைகள் எதிர்கொள்கின்றனர். போர் நடந்துகொண்டிருக்கும்போதே போர்க்கால அடிப்படையில் குழந்தைகளுக்கு உளவியல் ஆலோசனைகளை அளிக்க வேண்டும். பல்வேறுகட்ட தினசரிப் பயிற்சிகளுக்குப் பிறகு போரில் ஈடுபடும் வீரர்களுக்கே மன அழுத்தம் ஏற்படுவதைக் காணமுடிகிறது. இதில் பிஞ்சுக் குழந்தைகள் எம்மாத்திரம் என்பதை அரசுகள் எண்ணிப்பார்க்க வேண்டும்.
அழுதுகொண்டே இருப்பது, தூங்காமல் அவதிப்படுவது, சரியாகப் படிக்க முடியாமல் போவது, பதற்ற நிலையிலேயே இருப்பது ஆகியவற்றின்ம்மூலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளை எளிதில் கண்டறியலாம். இவர்களுக்கு உளவியல் ஆலோசகர்கள் மூலம் Cognitive Behavioral Therapy (CBT) எனப்படும் எண்ணங்களை மாற்றுவதன் மூலம் செய்யும் செயல்களை ஒழுங்குபடுத்தி, ஆற்றுப்படுத்தும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. தேவைப்படும் சூழலில் மருந்து, மாத்திரைகளும், மூச்சுப் பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன.
பெற்றோரும், ஆசிரியர்களும் அரசும் என்ன செய்ய வேண்டும்?
* நடந்தது நடந்துவிட்டது; மீண்டும் இவ்வாறு நடக்காது என்பதைக் குழந்தைகளின் தெளிவாகப் புரியவைக்க வேண்டும்.
* நம்மை மீறி நடக்கும் விஷயங்களுக்குக் குற்ற உணர்ச்சியோ, பய உணர்ச்சியோ கொள்ளக்கூடாது என உணர்த்த வேண்டும்.
* எதிர்காலத்தை நோக்கிய நேர்மறை எண்ணங்களை விதைக்க வேண்டும்.
* தேவையான அடிப்படை, கல்வி, மருத்துவ தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்'' என்கிறார் மோகன வெங்கடாசலபதி.
ஒருநாள் போர் முடிந்துவிடும்.
தலைவர்கள் மீண்டும் கைகுலுக்கிக் கொள்வர்.
குழந்தையை இழந்த பெற்றோரும்,
பெற்றவர்களை இழந்த பிஞ்சுகளும்
காலம் முழுக்கக் காத்திருப்பர்...
என்ற புகழ்பெற்ற வரிகளை நினைவில் நிறுத்தி, வல்லரசுகள் செயல்படுவது குழந்தைகளுக்கும் மானுட சமூகத்துக்கும் நன்மை பயக்கும்.