இலங்கையில் இன்று நடைபெற்ற வன்முறையில் மகிந்த ராஜபக்ஷேவுக்கு ஆதரவளித்த எம்பிக்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடிகளுக்கு ராஜபக்ஷே குடும்பத்தினர்தான் என்றும், அவர்கள் தான் இலங்கை இந்த நிலைமைக்கு தள்ளப்பட்டது என்று கூறி இலங்கை முழுவதும் பல மாதங்களாக கடும் போராட்டம் நடைபெற்று வருகிறது. பிரதமர் ராஜபக்சே உள்பட அவரது குடும்பத்தினர் அனைவரும் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் இலங்கையில் உள்ள பிரதமரின் இல்லமான டெம்பிள் ட்ரீஸ் முன்பு போராட்டக்காரர்கள் குவிந்தனர். பிரதமர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அவர் பதவி விலகக் கூடாது என்று ராஜபக்ஷே ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே இரு தரப்பினரிடையிலும் மோதல் ஏற்பட்டது.
காவல்துறையினர் முன்னிலையிலேயே ராஜபக்சே ஆதரவாளர்கள் பொதுமக்களை கடுமையாக தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் இரு தரப்பினரிடையேயும் ஏற்பட்ட கடுமையான மோதலை தடுக்க காவல்துறையினர், ராணுவத்தினர் தடியடி, கண்ணீர் புகை வீசுதல், தண்ணீர் பீய்ச்சியடித்தல் என்று பல்வேறு வகைகளில் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனிடையே இலங்கை பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக மகிந்த ராஜபக்ஷே அறிவித்ததோடு, ராஜினாமா கடிதத்தை அதிபர் கோத்தபய ராஜபக்ஷேவிற்கு அனுப்பி வைத்தார்.
இந்த நிலையில், பிரதமர் ராஜபக்ஷேவுக்கு ஆதரவளிப்பதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் வந்த, ராஜபக்சே கட்சியின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா கட்சியின் ஆதரவாளர்கள் பேருந்துகளில் வந்திருந்தனர். திரும்பிச் செல்கையில் பேருந்துகளை போராட்டக்காரர்கள் அடித்து நொறுக்கினர்.
அதுமட்டுமல்லாமல் வில்கோடாவில் உள்ள முன்னாள் அமைச்சர் ஜான்ஸ்டன் ஃபெர்னாண்டோவின் அலுவலகம், குருனேகலாவில் உள்ள அவரது வீட்டை தாக்கியதோடு தீ வைத்து எரித்தனர்.
மொரத்துவாவின் மேயர் சமன்லால் ராஜபக்ஷேவுக்கு ஆதரவாக எட்டு பேருந்துகளில் ஆட்களை ஏற்றிக்கொண்டு டெம்பிள் ட்ரீஸ்க்கு சென்றிருந்தார் அவரும் போராட்டக்காரர்களால் தாக்குதலுக்குள்ளாகியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திகா பெர்னாண்டோ வின் கொச்சிக்கடே வீட்டையும் போராட்டக்காரர்கள் தீக்கிரையாக்கினர்.
அருந்திகா மட்டுமல்லாமல் புட்டலம் எம்பியும், முன்னாள் அமைச்சருமான சனத் நிஷாந்தா மற்றும் அவரது சகோதரர் அரச்சிகட்டுவா, ஜகத் சமந்தா, முன்னாள் அமைச்சர் ரமேஷ் பதிராணா, ப்ரசன்ன ரணதுங்கா, கம்பகா மேயர் எரங்கா செனனாயகே ஆகியோரது வீடுகளும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.
இதே போன்று மகிந்த ராஜபக்ஷேவிற்கு ஆதரவளித்த பல்வேறு நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் மீது கல்வீச்சு தாக்குதலும் நடைபெற்றுள்ளது. இலங்கை தலைநகரான கொழும்புவில் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு வன்முறை செல்வதால் அந்நாட்டு காவல்துறையில் அனைவருக்கும் விடுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. விடுப்பில் உள்ளவர்களும் பணிக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.