ஆஃப்கானிஸ்தானின் புதிய அதிபராக தலிபானின் முகமது ஹசன் அகூண்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தலிபான் தலைவரான அப்துல் கனி பர்தார் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆகஸ்ட் மாத மத்தியில் ஆஃப்கானை முழுவதுமாகக் கைப்பற்றிய தலிபான்கள் உடனடியாகப் புதிய அரசை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் இழுபறி, பேச்சுவார்த்தையில் பின்னடைவு என அரசாங்கம் அமைவது இழுத்தடிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில்தான் முகமது ஹசன் அகூண்ட் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஹசனைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கத் தொடக்கத்திலிருந்தே பெருவாரியான ஆதரவு இருந்துள்ளது. இதற்கிடையேதான் தற்போது அதிகாரப்பூர்வமாகத் தலைவராகியிருக்கிறார் முகமது ஹசன்.
சர்வதேச அரசியலில் இதுவரை அறியப்படாத பெயர் முகமது ஹசன் அகூண்ட், யார் இவர்?
முல்லா முகமது ஹசன் அகூண்ட் நியமனத்தை மூன்று தலிபான் தலைவர்கள் முதலில் உறுதி செய்தனர். தலிபான்களின் தலைமைப் பொறுப்பை முடிவு செய்யும் ரெஹ்பரி ஷூரா தலைமைத்துவக் கவுன்சிலின் தலைவராக இருப்பவர் ஹசன். தலிபான்கள் ஆட்சியில் இல்லாத இந்த 20 ஆண்டு காலத்தில் ரெஹ்பரி ஷூராவின் தலைவராக இருந்து தலிபான் தவிடுபொடியாகாமல் பார்த்துக்கொண்ட பொறுமைசாலி என்கின்றனர் அவரை அறிந்த மூத்த தலிபான் தலைவர்கள். முகமது ஹசன் அகூண்ட் பிறந்து வளர்ந்த ஊர் தலிபான்களின் பிறப்பிடமான கந்தஹார். தலிபான்களின் ஆயுதப்படையின் நிறுவனர்களில் ஒருவராகவும் ஹசன் பொறுப்பேற்றிருந்தார்.
பிற தலிபான்களைப் போலத் துப்பாக்கி ஏந்தத் தெரியாதவர் ஆனால் துப்பாக்கிப் படைகளை உருவாக்கினார். இராணுவப் பின்னணி ஏதும் இல்லாத மதகுரு முல்லா முகமது ஹசன் அகூண்ட். தலிபான்களின் தற்போதைய தலைவராக அறியப்படும் ஷேக் ஹிபத்துல்லா அகூண்டசாவின் வலதுகரமாக 20 ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றியவர். 20 வருடங்களுக்கு முன்பான ஆஃப்கானில் தலிபான் ஆட்சிக்காலத்தில் வெளியுறவு அமைச்சராக இருந்தவர் ஹசன். பாகிஸ்தான் முன்னாள் அதிபர் நவாஸ் ஷெரீஃபின் நெருங்கிய நண்பர். ஆஃப்கான் அதிபராக இருந்த முல்லா முகமது ரப்பானி அகுந்த் அமைச்சரவையில் ஹசன் துணைப் பிரதமராகவும் இருந்தார்.
Also Read: ஆஃப்கான் புதிய அதிபர் ஆகிறார் தலிபானின் முகமது ஹசன்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!