ஆஃப்கானிஸ்தானின் புதிய அதிபராக தலிபானின் முகமது ஹசன் அகூண்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த செய்தியை தலிபானின் தலைமைச் செய்தித் தொடர்பாளர் உறுதிபடுத்தியுள்ளார். மேலும், இந்த அரசு தற்காலிக அரசாகத்தான் இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். தலிபான் தலைவரான அப்துல் கனி பர்தார் துணை அதிபராகப் பதவி வகிப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது.
இது தவிர இரண்டாம் நிலை துணை அதிபராக மவுல்வி ஹன்னாஃபியும் பாதுகாப்புத்துறை அமைச்சராக முல்லா யக்கூப் உள்துறை அமைச்சராக சிராஜூதின் ஹக்கானியும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை செய்தித்தொடர்பாளர் சபிஹுல்லா இன்று வெளியிட்டுள்ளார். முன்னதாக, ஆஃப்கானிஸ்தானில் மக்களின் போராட்டத்தை ஒடுக்க தலிபான்கள் காற்றில் துப்பாக்கியால் சுட்டதில் அங்கே பெரும் கலவரம் வெடித்துள்ளது. உயிரிழிப்பு அல்லது வன்முறை குறித்து மேலதிகத் தகவல் எதுவும் இதுவரைக் கிடைக்கப்பெறவில்லை. ஆஃப்கானிஸ்தானில் தலிபான் படைகள் தலைநகர் காபூலைக் கையகப்படுத்தியப் பிறகு அமெரிக்கப் படைகள் கடந்த ஆகஸ்ட் 31 தேதி மொத்தமாக அந்த நாட்டிலிருந்து வெளியேறின. இதற்கிடையே ஆஃப்கானிஸ்தானில் ஆட்சி அமைப்பதில் இன்னும் தலிபான்களுக்கு இடையே இழுபறி நிலவுவருகிறது. இந்த நிலையில் தலிபான்களுக்கு எதிராக ஆஃப்கான் மக்கள் தொடர்ந்து தங்களது எதிர்ப்புகளைப் பதிவு செய்து வருகின்றனர். குறிப்பாக தலிபான்களுக்கு ஆதரவாக பாகிஸ்தான் செயல்பட்டு வரும் நிலையில் அண்மையில் ஆஃப்கான் மக்கள் பாகிஸ்தான் தூதரகத்தை முற்றுகையிட்டனர். ஆஃப்கான் விவகாரத்தில் பாகிஸ்தான் தலையிடுவதற்கு அவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
சுமார் 70 ஆஃப்கான் மக்கள் பாகிஸ்தான் தூதரகத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தை ஒடுக்க தலிபான்கள் காற்றில் துப்பாக்கியால் சுட்டனர். மக்களை நோக்கி துப்பாக்கியைப் பயன்படுத்த வேண்டாம் என அண்மையில் தலிபான் செய்தித் தொடர்பாளர் சபிஹுல்லா தலிபான்களுக்கு அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா வெளியேறியதையும் தலிபான்கள் தலைமையில் அங்கே புதிய ஆட்சி அமைய இருப்பதையும் கொண்டாடும் விதமாக அங்கே தலிபான் படையினர் சிலர் காற்றில் எக்குத்தப்பாகச் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டாடியதில் 17 ஆஃப்கான் மக்கள் பலியானதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதையடுத்து தலிபான்களின் முதன்மை செய்தித் தொடர்பாளரான சபிஹுல்லா, ‘காற்றில் சுடுவதைத் தவிர்த்து, கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள். உங்கள் கைகளில் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் உள்ளன. அவற்றை வீணாக்க யாருக்கும் உரிமை இல்லை. துப்பாக்கித் தோட்டாக்கள் பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கும்.எனவே தேவையில்லாமல் சுட வேண்டாம்’ என தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவுறுத்தியிருந்தார். முன்னதாக, பழமைவாதக் கொள்கைகளைக் கொண்ட தலிபான் அமைப்பினர் கடந்த ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானில் மேற்குலக ஆதரவுடன் ஆட்சி செய்துகொண்டிருந்த முன்னாள் அதிபர் அஷ்ரப் கனியின் அரசை வீழ்த்தி, ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றினர். கடந்த ஆட்சிக் காலத்தைப் போல அல்லாமல், தற்போதைய ஆட்சி வேறு வகையில் இருக்கும் என நாட்டைக் கட்டுப்படுத்தியவுடன் அறிவித்தனர் தலிபான்கள்.