"இவர தெரியல, இவருதான் பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸ்", என கவுண்டமணி சொல்லும் வசனம் கூட நம்மூர் மக்கள் மனதில் இன்னமும் சார்லஸ்-ஐ இளவரசராகவே வைத்திருக்க அவர் ராஜாவாக அரியணை ஏறி புதிய அவதாரம் எடுக்க இருக்கிறார்.


ராணி எலிசபெத் உயிரிழப்பு


இங்கிலாந்து மகாராணி 2-ம் எலிசபெத் தனது 96-வது வயதில் நேற்று ஸ்காட்லாந்தில் உள்ள பால்மொரல் பண்ணை வீட்டில் உயிரிழந்ததாக பக்கிங்காம் அரண்மனை தகவல் தெரிவித்த நிலையில் இங்கிலாந்தின் புதிய ராஜாவாக இளவரசர் 3-ம் சார்லஸ் அரியணை ஏறியுள்ளார். சார்லஸ் பிலிப் அர்துர் ஜார்ஜ் என்ற இயற்பெயர் கொண்ட 3-ம் சார்லஸ் நேற்று உயிரிழந்த 2-ம் எலிசபெத்தின் மூத்த மகன் ஆவார். 73 வயதான சார்லஸ் இங்கிலாந்தின் புதிய ராஜாவாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இவர் அரியணை ஏறும் விழா விரைவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



டயானா மரணம்


இவர் தனது முதல் மனைவியான இளவரசி டயானாவை 1996-ம் ஆண்டில் விவகரத்து செய்தார். விவாகரத்து செய்த அடுத்த ஆண்டே டயானா 1997-ல் சாலை விபத்தில் உயிரிழந்தார். இந்த மரணத்தில் மகாராணி பெயர் அடிபட்ட நிலையில் கடைசி வரை உண்மைகள் கண்டுபிடிக்கப் படவில்லை. அவரது மரணத்தில் இப்போது வரை மர்மம் நீடித்து வருகிறது.


தொடர்புடைய செய்திகள்: எலிசபெத் ராணி உயிர்பிரிந்த நேரம் வானத்தில் தோன்றிய இரட்டை வானவில்! மக்கள் நெகிழ்ச்சி!


ராணி கமிலா


இதனை தொடர்ந்து 2005 ஆம் ஆண்டில் கமிலா என்பவரை சார்லஸ் 2-வதாக திருமணம் செய்துகொண்டார். இங்கிலாந்தின் புதிய ராஜாவாக சார்லஸ் அரியணை ஏற உள்ள நிலையில், ராணியாக கமிலா அரியணை ஏறுவார். இந்தியாவை பிரிட்டன் ஆட்சி செய்த காலத்தில் கொண்டு செல்லப்பட்ட கோகினூர் வைரத்தால் செய்யப்பட்ட கீரிடம் இனி கமிலா வசம் செல்ல உள்ளது. 



இளவரசர் டு அரசர்


பல ஆண்டு காலமாக இளவரசர் என்று சொல்லியே பழக்க பட்ட சார்லஸ் ராஜாவாக புதிய அவதாரம் எடுக்க உள்ளார். அது மட்டுமின்றி மூன்றாம் சார்லஸ் 54 நாடுகள் அடங்கிய காமன் வெல்த் நாடுகளின் தலைவராகவும் பொறுப்பேற்க உள்ளார். பல ஆண்டுகளாக இளவரசர் சார்லஸ் என்று கூறிவந்த இங்கிலாந்து மக்கள் இனி ராஜாவாக சார்லஸை பார்கப்போகிறார்கள். அதுமட்டுமின்றி இன்னும் தேர்வு செய்யப்படாமல் இருக்கும் இங்கிலாந்து பிரதமர் தேர்விலும் இவருடைய பார்வை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.