இங்கிலாந்து மகாராணி எலிசபெத் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் அரண்மனையில் நேற்று (செப்.09) இரவு 11.15 மணிக்கு உயிரிழந்தார். அவருக்கு வயது 96.
கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி உடல்நலப் பிரச்சினைகளால் தளர்ச்சியடைந்தார். மேலும் அவர் நடக்கவும் நிற்கவும் சிரமப்பட்டு வந்த நிலையில் நேற்று அவர் உயிரிழந்தார். கடந்த 1926ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதி ஜார்ஜ் 6 ஆம் மன்னருக்கு பிறந்த எலிசபெத் மகாராணி தன் தந்தை இறப்புக்குப் பிறகு 1953ஆம் ஆண்டு ராணியாக முடிசூடிக் கொண்டார்.
மொத்தம் 70 ஆண்டுகள் பதவி வகித்துள்ள எலிசெபத் மகாராணி, வின்ஸ்டன் சர்ச்சில், மார்கரேட் தட்சர் தொடங்கி லிஸ் டிரஸ் வரை 15க்கும் மேற்பட்ட பிரதமர்களை நியமித்துள்ளார்.
முன்னதாக எலிசபெத் ராணி உயிரிழக்கும்நேரத்தில் பக்கிங்ஹாம் அரண்மனை பகுதியில் இரட்டை வானவில் தோன்றியது இங்கிலாந்து மக்களை பெரும் உணர்ச்சிப்பெருக்கில் ஆழ்த்தியுள்ளது. இதேபோல் பால்மோரல் அரண்மனையிலும் வானவில் தோன்றியது.
ஒருவர் இறக்கும் தருணத்தில் வானவில் தோன்றினால் அவர் சொர்க்கத்தை அடைவார் என்பது அந்நாட்டு மக்களின் நம்பிக்கையாக விளங்கும் நிலையில் ராணி எலிசெபெத் இறக்கும் தறுவாயில் வானவில் தோன்றியது இங்கிலாந்து மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த ஜூலை மாதம் முதல் தமது ஸ்காட்லாந்து இல்லத்தில் கோடை விடுமுறையில் இருந்தார் எலிசபெத். தனது 70 வருட ஆளுகையில், புதிய பிரதமராக நியமிக்கப்படுபவரை பக்கிங்காம் அரண்மனையில் சந்திப்பதையே வழக்கமாகக் கொண்டிருந்தார்.
ஆனால், லிஸ் ட்ரஸ்ஸை ஸ்காட்லாந்தில் வைத்து பார்த்தபோதே அவருக்கு உடல்நிலை சரியில்லை என்று அரசல் புரசலாகப் பேசப்பட்டது. பொதுவாக இங்கிலாந்து ராணி உடல் நலம் பற்றிய தகவல்கள் வெளியில் சொல்லப்படாது என்றாலும், பால்மோரல் கோட்டையில் உள்ள ராணியின் உடல்நிலை குறித்து வெளியான மருத்துவ அறிக்கை நேற்று அதை உறுதி செய்தது.