ஆஸ்திரேலியாவில் லிட்டில் இந்தியா என அழைக்கப்படும் சிட்னியின் புறநகர்ப் பகுதியான ஹாரிஸ் பார்க் பகுதியில் நடந்த கிரேட் ஃப்ரைடே நிகழ்வின்போது அங்கு போடப்பட்டிருந்த கடைகளில் இந்திய ஸ்ட்ரீட் உணவுகளான சாட் மற்றும் ஜிலேபி போன்றவற்றை ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ், இந்திய பிரதமர் மோடியின் பரிந்துரையின் பேரில் சாப்பிட்டதாக டிவிட் செய்துள்ளார்.
இந்திய உணவுகள் சாப்பிட்ட ஆஸ்திரேலிய பிரதமர்
எல்லா வெள்ளிக்கிழமைகளிலும் விழாக்கோலம் பூண்டு காணப்படும் சிட்னியின் ஹாரிஸ் பார்க் பகுதி நேற்று (ஜூன் 23) வழக்கத்தை விட சற்று பிரகாசமாக ஜொலித்தது. அதற்கு காரணம் அந்நாட்டு பிரதமர் அந்தோணி அல்பனீஸ் கலந்து கொண்டதுதான். கலந்து கொண்டது மட்டுமின்றி, இந்த அனுபவத்தைப் பற்றி ட்வீட் செய்ததோடு, இந்திய உணவை ரசிக்கும் வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.
அல்பானீஸ் வெளியிட்ட ட்வீட்
"கிரேட் ஃப்ரைடே இரவு லிட்டில் இந்தியா, ஹாரிஸ் பார்க்கில் ஆண்ட்ரூ சார்ல்டனுடன் இணைந்து, இந்திய பிரதமர் நரேந்திர மோடி பரிந்துரைத்த, சாட்காஸில் இருந்து சாட் மற்றும் ஜெய்ப்பூர் ஸ்வீட்ஸில் இருந்து ஜிலேபி ஆகியவற்றை சாப்பிட்டு பார்த்தோம்!" என்று அல்பானீஸ் ட்வீட் செய்துள்ளார்.
ஹாரிஸ் பூங்கா
பரமட்டாவில் அமைந்துள்ள ஹாரிஸ் பூங்கா, ஒரு பெரிய இந்திய சமூகத்தின் தாயகமாகும். இது இந்திய உணவு வகைகள் மற்றும் பல இந்திய வணிகங்கள் மற்றும் கடைகளுக்கு பேர் போன இடமாகும். கடந்த மாதம் சிட்னியில் உள்ள குடோஸ் பேங்க் அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் ஆகியோர் 'லிட்டில் இந்தியா' நுழைவாயிலுக்கு அடிக்கல் நாட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடி பதில்
அல்பானீஸ் பதிவிட்ட டிவீட்டுக்கு பிரதமர் மோடி, "இந்திய கலாச்சாரம் மற்றும் சமையல் பன்முகத்தன்மையை உள்வாங்கும் ஒரு மறக்கமுடியாத வெள்ளிக்கிழமை இரவு போல் தெரிகிறது. உண்மையில் இந்தியா-ஆஸ்திரேலியா நட்புறவைப் போலவே இதுவும் ஒரு வெற்றி பெறட்டும்," என்று பதிலளித்தார். கடந்த மாதம் ஆஸ்திரேலியா சென்ற மோடி, சிட்னியில் நடந்த ஒரு சமூக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசும் போது, "ஹாரிஸ் பூங்காவில் உள்ள ஜெய்ப்பூர் ஸ்வீட்ஸில் இருந்து 'ஜலேபி' மற்றும் சாட்காஸ்-இல் இருந்து 'சாட்' ஆகியவை மிகவும் சுவையாக இருப்பதாக நான் கேள்விப்பட்டேன். நீங்கள் அனைவரும் எனது நண்பர் ஆஸ்திரேலிய பிரதமர் அல்பனீஸை அந்த இடத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று நான் விரும்புகிறேன்." என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதனடிப்படயிலேயே அல்பனீஸ் அந்த உணவுகளை சாப்பிட்டு பார்த்துள்ளார்.