வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன். இந்தப் பெயரே செய்தி தான். இவர் நடந்தால், சிரித்தால், இல்லை எதுவுமே செய்யாமல் இருந்தாலும் கூட செய்தி தான். உலகமே அஞ்சும் அளவுக்கு அணு ஆயுதங்களை வைத்திருப்பதாலேயே கிம் இவ்வளவு கவனம் பெறுகிறார்.


உலகமே கொரோனாவால் பாடாய்பட்டுக் கொண்டிருந்தாலும் வடகொரியாவில் ஒரே ஒரு கொரோனா கேஸ் கூட இல்லை என மார்தட்டிக் கொண்டு திரிகிறார் கிம் ஜோங் உன்.


அப்பேற்பட்ட கிம் ஜோங் உன் கடந்த வியாழக்கிழமை நள்ளிரவு பிரம்மாண்ட பேரணியை நடத்தியுள்ளார். வடகொரிய நாடு தோற்றுவிக்கப்பட்ட 73 ஆண்டு தினத்தை ஒட்டியே இந்த பிரம்மாண்ட கண்கவர் பேரணி நடந்தது. இந்தப் பேரணியில் ராணுவ டேங்கர்கள், படை வீரர்கள், நாய்கள், குதிரைகளில் வீரர்கள், கேஸ் மாஸ்க் எனப்படும் முழுக்கவசன் அணிந்த வீரர்கள் என ஆயிரக் கணக்கானோர் பேரணியில் கலந்து கொண்டனர்.
கடந்த அக்டோபர் மாதமும் வடகொரியாவில் இது போன்றதொரு பேரணி நடந்தது. அந்தப் பேரணியின் போது வடகொரியாவின் மிகப்பெரிய அணு ஆயுத ஏவுகணையை உலகுக்கு காட்டப்பட்டது. அது உலக நாடுகளுக்கு மேலும் அச்சத்தைக் கூட்டியது.


இந்நிலையில் நேற்று முன் தினம் நடந்த பேரணியின் ஹைலைட்டே வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் தான்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கிம் முன் எப்போதையும் விட எடை குறைந்து மிடுக்காகக் காணப்பட்டார். அவர் கிட்டத்தட்ட 20 கிலோ எடை குறைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.




கிம் ஜோங் உன் எடை குறைந்து ஆரோக்கியமாக காணப்படுவது உலக நாடுகளின் ஊடகங்களில் முக்கியச் செய்தியாகி உள்ளது. ஏனெனில் கடந்த ஆண்டு திடீரென கிம் பற்றிய வதந்திகள் கிளம்பின. கிம் உயிரிழந்துவிட்டதாகவும் ரகசியமாக உடல் நல்லடக்கம் செய்யப்பட்டு விட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. மேலும், கிம்மின் சகோதரி வடகொரியாவின் அடுத்த அதிபராகக் கூடும் என்றும் கூறப்பட்டது.


ஆனால், அதிபர் கிம் ஜோங் உன் உடல்நலக் குறைவால் தான் பாதிக்கப்பட்டிருக்கிறார் மற்றபடி அவரது உயிருக்கு ஆபத்து இல்லை என்ற தகவல் வெளியானது. இந்நிலையில் தான் 73வது தேசிய தினத்தில் கிம் ஜோங் உன் ஆரோக்கியமாக உடல் எடையைக் குறைத்து குழந்தைகளுடன் குதூகலமாக காட்சியளிக்கும் செய்தி வைரலாகி வருகிறது.
வடகொரியாவில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஒட்டுமொத்த நாடும் உலக நாடுகளுடனான தொடர்பை அறுத்து தனிமைப்படுத்துதலில் உள்ளது. நாட்டின் எல்லைகளை மூடிவிட்டதால் அங்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், தடுப்பூசி விவகாரத்திலும் வடகொரியா கெடுபிடிகளைக் கடைபிடிக்கிறது.