அமெரிக்கா ஏன் இந்தியாவிற்கு நிதி உதவி வழங்க வேண்டும்? அமெரிக்கப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட அதிக வரியால் இந்தியா ஏற்கனவே பயன் அடைந்துள்ளது. அவர்கள் நம்மை பயன்படுத்திக் கொள்கிறார்கள் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விமர்சித்துள்ளார். இந்தியாவில் வாக்காளர் சதவீதத்தை அதிகரிக்க, அமெரிக்கா நிதியுதவி அளித்தது குறித்து சமீபத்தில் சர்ச்சை எழுந்த நிலையில், இந்தியாவை மீண்டும் சாடி இருக்கிறார் ட்ரம்ப்.


இந்திய தேர்தல்களில் தலையிட்டதா அமெரிக்கா?


அமெரிக்காவில், அரசின் செலவினங்களை குறைக்கும் நடவடிக்கைகளில், அந்நாட்டின் அரசு செயல்திறன் துறை இறங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, இந்தியாவில் வாக்காளர் சதவீதத்தை அதிகரிக்க, அமெரிக்க அரசு வழங்கி வந்த நிதியை நிறுத்துவதாக அறிவித்தது.


ஏற்கனவே, 21 மில்லியன் டாலர்கள் நிதியுதவி அளிக்கப்பட்டது குறித்து பேசிய அதிபர் ட்ரம்ப், பைடன் அரசால் வழங்கப்பட்ட அந்த தொகை, இந்தியாவில் நடைபெற்ற தேர்தலில் குறுக்கிட்டு, வேறு யாரையாவது தேர்ந்தெடுக்கும் நோக்கில் வழங்கப்பட்டிருக்கலாம் என குற்றம்சாட்டினார்.


"அமெரிக்காவை பயன்படுத்தி கொள்ளும் இந்தியா"


இந்நிலையில், இந்த நிதியுதவி குறித்து கடந்த சில நாட்களாகவே அதிபர் ட்ரம்ப் பேசி வருகிறார். அதன் தொடர்ச்சியாக, அமெரிக்கா ஏன் இந்தியாவிற்கு நிதி உதவி வழங்க வேண்டும்? என மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளார்.


வாஷிங்டனில் கன்சர்வேடிவ் அரசியல் நடவடிக்கை மாநாட்டில் பேசிய ட்ரம்ப், "இந்திய தேர்தல்களுக்கு உதவும் நோக்கில் பதினெட்டு மில்லியன் டாலர்கள் வழங்கப்பட்டுள்ளது. ஏன் இப்படி? நாம் ஏன் பழைய காகித வாக்குச்சீட்டுகளுக்குச் செல்லக்கூடாது, அவர்கள் நம் தேர்தல்களுக்கு உதவட்டும். இல்லையா? வாக்காளர் ஐடி. அது நன்றாக இருக்கும் அல்லவா? நாங்கள் தேர்தல்களுக்கு இந்தியாவிற்கு பணம் கொடுக்கிறோம். அவர்களுக்கு பணமே தேவையில்லை.


அவர்கள் நம்மை நன்றாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். உலகிலேயே அதிக வரி விதிக்கப்படும் நாடுகளில் ஒன்று இந்தியா. நாங்கள் எதையாவது விற்க முயற்சிக்கிறோம். அவர்களிடம் 200 சதவீத வரி உள்ளது. பின்னர், அவர்களின் தேர்தலுக்கு உதவ நாங்கள் அவர்களுக்கு நிறைய பணம் தருகிறோம்" என்றார்.


அமெரிக்காவின் குற்றச்சாட்டுகள் குறித்து நேற்று பேசிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், "டிரம்ப் நிர்வாகத்தினரால் சில தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அது கவலையளிக்கிறது என்பது தெளிவாகிறது. ஒரு அரசாங்கமாக, நாங்கள் அதைப் பற்றி ஆராய்ந்து வருகிறோம் என்று நினைக்கிறேன். உண்மைகள் வெளிவரும் என்பது என் கருத்து" என்றார்.