அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸ் வெற்றி பெற கோவிலில் பொதுமக்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ், முன்னாள் அதிபர் ட்ரம்பை எதிர்த்து போட்டியிடுகிறார். கமலா ஹாரிஸ் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபுரம் கிராமத்தை பூர்விகமாக கொண்டவர். ஆங்கிலேய அரசாங்கத்தில் இவரது தாத்தா பி.வி. கோபாலன் ஸ்டெனோகிராபராக இருந்தார். அதன் தொடர்ச்சியாக சிவில் சர்வீஸ் அதிகாரியாக பணியாற்றினார். ஷாம்பியா நாட்டுக்கு அகதிகளை கணக்கெடுக்க ஆங்கிலேய அரசாங்கம் பி.வி. கோபாலனை அனுப்பி வைத்தது. அப்போது ஷாம்பியா நாட்டுக்கு குடும்பத்தோடு சென்று, பின்னர் அமெரிக்காவில் பி.வி கோபாலன் குடியேறினார்.
கமலா ஹாரிஸ் தாய் வழி தாத்தா ஊர்
இவரது இரண்டாவது மகளான சியாமளாவுக்கும், ஜமைக்கா நாட்டை சேர்ந்தவருக்கும் பிறந்தவர் தான் கமலா ஹாரீஸ். இவர் வழக்கறிஞராக பணியாற்றினார். அரசியலில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு கலிபோர்னியாவின் முதல் பெண் உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார். அரசியலில் வளர்ந்து கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில், துணை அதிபராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். இன்று மாலை நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளராக போட்டியிடுகிறார்.
துளசேந்திரபுரத்தில் வழிபாடு
இந்த நிலையில் கமலா ஹாரீஸ் குடும்பம் இன்றளவும் தமிழகத்தோடு நெருக்கமாக உள்ளது. அவரது சித்தி சென்னையில் வசித்து வருகிறார். அவரது உறவினர்களில் சிலர் துளசேந்திரபுரம் கிராமத்தில் இன்றும் வசிக்கின்றனர். மேலும் அவரது குலதெய்வ கோயிலான தர்ம சாஸ்தா கோயில் துளசேந்திரபுரத்தில் உள்ளது. அந்த கோயிலுக்கு கமலாஹரிஸ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நன்கொடை அளித்துள்ளார் என்ற விபரம் கோயில் கல்வெட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற வேண்டி துளசேந்திரபுரம் கிராம மக்கள் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த அவரது நண்பர்கள் கமலாஹாரிஸ் வெற்றி பெற வேண்டி குலதெய்வ கோயிலில் சிறப்பு வழிபாடு மற்றும் சிறப்பு பூஜை செய்தனர். அவர் வெற்றி பெற்று துளசேந்திரபுரம் கிராமத்திற்கு வருகை தந்து மக்களை சந்திக்க வேண்டும் எனவும் இந்தியாவிற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என கிராம மக்கள் தெரிவித்துள்ளனர் மேலும் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தி அவர் வெற்றி பெற கிராம மக்கள் வழிபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது