ஸ்பெயின் நாட்டில் உள்ள அந்தலூசியா பாராளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அந்தலூசியா பாராளுமன்றத்தில் நேற்று கூட்டத்தொடர் நடைபெற்று இருந்தபோது, சுசானா டயஸ் என்பவரை செனட்டராக நியமிப்பதற்காக தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்த தீர்மானத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் வாக்களிப்பதற்கு உறுப்பினர்கள் தயாராகினர். அப்போது, திடீரென உறுப்பினர்கள் அமர்ந்திருந்த இடத்திற்குன் உள்ளே எலி ஒன்று புகுந்தது. அந்த எலி அங்கும், இங்குமென சபையில் ஓடியது. எலியை கண்ட பெண் உறுப்பினர் ஒருவர் பயத்தில் அலறியடித்துக் கொண்டு தனது இருக்கையை விட்டு எழுந்து ஓடினார். அந்த எலி அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்த காரணத்தால் நாடாளுமன்றத்திற்குள் அமர்ந்திருந்த உறுப்பினர்கள் அனைவரும் தங்களது இருக்கைகளில் இருந்து எழுந்து வேறு இடங்களுக்கு செல்லத் தொடங்கினர்.
எலி அவைக்குள் நுழைந்ததை கண்ட அவையின் தலைவர் மார்தா பாஸ்கட், அதிர்ச்சி அடைந்தார். அவர் அதிர்ச்சியில் தனது வாயை கைகளால் மூடிக்கொண்டார். பின்னர், நீண்ட போராட்டத்திற்கு பிறகு எலி பிடிக்கப்பட்டு, அவையில் இருந்து வெளியேற்றப்பட்டது. அதற்கு அவை உறுப்பினர்கள் அனைவரும் கை தட்டி ஆரவாரம் செய்தனர். பின்னர், அவைக்கு வந்த உறுப்பினர்கள் அனைவரும் தங்களது வாக்குகளை செலுத்தி சுசானா டயசை தேர்வு செய்தனர்.
திடீரென நாடாளுமன்ற அவைக்குள் எலி புகுந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், சபாநாயகர் மார்தா பாஸ்கட் வாயை மூடி தனது அதிர்ச்சியை வெளிப்படுத்திய புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.