இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சிறைபிடிக்கப்பட்டிருந்த 20 இஸ்ரேலிய பணயக்கைதிகள் ஹமாஸ் கையிலிருந்து விடுவிக்கப்பட்டதையடுத்து, உலகம் முழுவதும் நிம்மதி மூச்சு விட்டுள்ளது. இந்த விடுதலைக்கு பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை பாராட்டினார்.

Continues below advertisement


டிரம்பை பாராட்டிய மோடி


இந்த விடுதலை குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி “இந்த சுதந்திரம் அவர்களது குடும்பங்களின் தைரியத்திற்கும், ஜனாதிபதி டிரம்பின் அமைதி முயற்சிகளுக்கும், பிரதமர் நெதன்யாகுவின் உறுதிப்பாட்டிற்கும் ஒரு சான்றாகும். பிராந்தியத்தில் அமைதியைக் கொண்டுவருவதற்கான ஜனாதிபதி டிரம்பின் உண்மையான முயற்சிகளை இந்தியா ஆதரிக்கிறது,” என பிரதமர் மோடி X தளத்தில் பதிவிட்டார்.






738 நாட்கள் கழித்து சுதந்திரம்


இரண்டு ஆண்டுகளாக நீடித்த சிறை வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து, ஹமாஸ் 20 இஸ்ரேலிய பணயக்கைதிகளை இரண்டு கட்டங்களாக விடுவித்துள்ளது. முதல் கட்டத்தில் 7 பேர், இரண்டாவது கட்டத்தில் 13 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.


விடுதலைக்குப் பிறகு, இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட புகைப்படங்களில், குடும்பத்தினரைத் தழுவும் அந்த தருணங்கள் உலகம் முழுவதும் உணர்ச்சியை கிளப்பின.


டிரம்ப்பின் மக்கள் சந்திப்பு 


விடுதலைக்குப் பிறகு டெல் அவிவில் குடும்பங்களைச் சந்தித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிணைக் கைதிகளாக இருந்தவர்களின் உறவினர்களையும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.


இதையடுத்து, இஸ்ரேலிய நாடாளுமன்றமான நெசெட்டில் உரையாற்றிய அவர், “இரண்டு கடினமான ஆண்டுகளுக்குப் பிறகு, 20 துணிச்சலான ஆன்மாக்கள் தங்கள் குடும்பங்களுக்குத் திரும்பியுள்ளனர். துப்பாக்கிகள் இப்போது அமைதியாகியுள்ளன. இது போரின் முடிவு அல்ல, ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கம்,” என்று கூறினார்.


“எதிரிகள் இப்போது எங்கள் பலத்தை உணர்ந்துள்ளனர்” — நெதன்யாகு


பணயக்கைதிகள் விடுதலைக்குப் பிறகு உரையாற்றிய இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, “இந்தப் போரில் இஸ்ரேல் பெரும் விலையைச் செலுத்தியுள்ளது. ஆனால் இப்போது எதிரிகள் நம் நாட்டின் உறுதியையும் வலிமையையும் தெளிவாகப் புரிந்திருக்க வேண்டும். அக்டோபர் 7 தாக்குதல் ஒரு பேரழிவான தவறு — இஸ்ரேல் உறுதியுடன் நிற்கும் நாடு என்பதை இப்போது அவர்கள் அறிந்துள்ளனர்,” என்று வலியுறுத்தினார்.


அமைதிக்கான புதிய திசை


இரண்டு வருடங்களாக நீடித்த மோதலுக்குப் பிறகு பணயக்கைதிகள் விடுதலை பெறுவது, ஒரு பெரிய மனிதாபிமான மற்றும் அரசியல் திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது. இது பிராந்திய அமைதி முயற்சிகளுக்கு புதிய ஊக்கமாக இருக்கும் என அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன.


தங்கள் அன்புக்குரியவர்கள் திரும்பி வந்ததை “அதிசயம் போன்ற தருணம்” என வர்ணித்துள்ள குடும்பங்கள், உணர்ச்சிபூர்வமாக “இது எங்கள் வாழ்க்கையின் புதிய தொடக்கம்” என்று கூறினர்.