PM Modi Moscow: உலக நன்மைக்காக ரஷ்யாவுடன் தோளோடு தோள் கொடுத்து இந்தியா செயல்படுவதாக  பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


இந்திய சமூகத்தினரிடையே பேசிய பிரதமர் மோடி:


ரஷ்யாவில் இரண்டு நாள் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அதன் ஒரு பகுதியாக இந்திய சமூகத்தினரிடையே உரையாற்றினார். மாஸ்கோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ​​அவர், “உலக செழிப்புக்கு புதிய ஆற்றலை வழங்க இந்தியாவும் ரஷ்யாவும் தோளோடு தோள் கொடுத்து உழைத்து வருகிறோம் என்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். ரஷ்யாவில் உள்ள அனைத்து இந்திய சமூக மக்களும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளுக்கு புதிய உயரங்களை வழங்குவதோடு, உங்கள் கடின உழைப்பு மற்றும் நேர்மையால் ரஷ்ய சமுதாயத்திற்கு பங்களித்துள்ளீர்கள்” என பிரதமர் பாராட்டினார்.


இந்தியாவின் தோஸ்த் ரஷ்யா - மோடி


தொடர்ந்து பேசுகையில், “ரஷ்யா என்ற வார்த்தையைக் கேட்டவுடன், ஒவ்வொரு இந்தியனின் மனதில் தோன்றும் முதல் வார்த்தை, இன்பத்திலும், துக்கத்திலும் இந்தியாவின் பங்குதாரர், இந்தியாவின் நம்பிக்கைக்குரிய நண்பன், அதை ‘தோஸ்த்’ என்கிறோம். குளிர்காலத்தில் ரஷ்யாவில் வெப்பநிலை எவ்வளவு மைனஸாக இருந்தாலும், இந்தியா - ரஷ்யா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான நட்பு எப்போதும் பிளஸ் மற்றும் அதே அரவணைப்புடன் இருக்கிறது. இந்த உறவு எப்போதும் பரஸ்பர நம்பிக்கை மற்றும் பரஸ்பர மரியாதையின் வலுவான அடித்தளத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. உக்ரைன் உடனான போர் சூழலில், சிக்கிக் கொண்ட இந்திய மாணவர்கள் பாதுகப்பாக தாயகம் திரும்ப உதவியர் நண்பர் புதின் என்று மோடி கூறினார்.






ரஷ்யாவில் புதிய துணை தூதரகங்கள் - மோடி 


தொடர்ந்து, ”ரஷ்யாவில் இரண்டு புதிய இந்திய துணை தூதரகங்கள் திறக்கப்படும். ஒரு புதிய தூதரகம் கசானில் திறக்கப்படும், மற்றொன்று யெகாடெரின்பர்க்கில் இருக்கும். இதன் மூலம் இரு நாடுகளுக்கு இடையேயான பயணம் மற்றும் வர்த்தகம் சீராக நடைபெறும். இன்று, ஜூலை 9 ஆம் தேதி, நான் மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமராகப் பதவியேற்று ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது. பதவியேற்றபோது மேலும் 3 மடங்கு அதிக வலிமையுடன், 3 மடங்கு அதிக வேகத்தில் வேலை செய்வேன் என்று சபதம் எடுத்தேன். அரசாங்கத்தின் பல இலக்குகளில் 3வது எண் இருப்பது ஒரு தற்செயல் நிகழ்வு. மூன்றாவது தவணையில் இந்தியாவை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற்ற வேண்டும் என்பதுதான் அரசாங்கத்தின் இலக்கு” என பிரதமர் மோடி தெரிவித்தார்.