ரஷியாவுக்கு இரண்டு நாள் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் நரேந்திர மோடி, அங்கிருந்து ஆஸ்திரியாவுக்கு சென்றுள்ளார். கடந்த 40 ஆண்டுகளில் இந்திய பிரதமர் ஒருவர் ஆஸ்திரியாவுக்கு பயணம் மேற்கொள்வது இதுவே முதல்முறை.


உக்ரைன் போர் குறித்து விவாதித்த பிரதமர் மோடி: உக்ரைன் போர் நடந்து வரும் நிலையில், ரஷிய, ஆஸ்திரியா பயணங்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த நிலையில், ஆஸ்திரிய பிரதமர் கார்ல் நெஹாம்மரிடம் பயனுள்ள விவாதத்தை மேற்கொண்டதாக மோடி தெரிவித்துள்ளார்.


உக்ரைன் போர், மேற்காசியாவில் நிலவும் சூழல் உள்பட பல உலகளாவிய விவகாரங்கள் குறித்து அவரிடம் பேசியதாக கூறினார். இது போருக்கான நேரம் என மீண்டும் வலியுறுத்திய பிரதமர் மோடி, "போர்க்களத்தில் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியாது.


பேச்சுவார்த்தை மற்றும் தூதரக உறவுகளை இந்தியாவும் ஆஸ்திரியாவும் வலியுறுத்துகின்றன. அதற்காக நாங்கள் எந்த ஆதரவையும் வழங்க தயாராக உள்ளோம். இந்தியாவும் ஆஸ்திரியாவும் பயங்கரவாதத்தை கடுமையாகக் கண்டிப்பதோடு, அது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்பதை ஒப்புக்கொள்கிறோம். இதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது" என்றார்.


"இது போருக்கான நேரம் அல்ல" ஆஸ்திரிய பிரதமர் உடனான உரையாடல் குறித்து பேசிய பிரதமர் மோடி, "இன்று, பிரதமர் நெஹாமரும் நானும் மிகவும் பயனுள்ள விவாதம் செய்தோம். நமது பரஸ்பர ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த புதிய வாய்ப்புகளை நாங்கள் கண்டறிந்துள்ளோம்.


எங்கள் உறவுக்கு வியூக ரீதியான திசையை வழங்க முடிவு செய்துள்ளோம். வரும் பத்தாண்டுகளுக்கு ஒத்துழைப்புக்கான செயல்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. உக்ரைனின் மோதலாக இருந்தாலும் அல்லது மேற்கு ஆசியாவின் சூழ்நிலையாக இருந்தாலும், உலகெங்கிலும் நடந்து வரும் மோதல்கள் பற்றி அதிபர் நெஹாமரும் நானும் நீண்ட நேரம் பேசியுள்ளோம். இது போருக்கான நேரம் அல்ல என்று நான் முன்பே கூறியுள்ளேன்" என்றார்.


தொடர்ந்து பேசிய ஆஸ்திரிய பிரதமர், "இந்தியா ஒரு செல்வாக்கு மிக்க நாடு. அனைத்து விதமான புகழ்களுக்கும் தகுதியான நாடு. ரஷியா-உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தைக்கு வரும்போது அதன் பங்கு முக்கியமானது. உக்ரைனுக்கு எதிரான ரஷிய ஆக்கிரமிப்பு பற்றி நாங்கள் தீவிரமாக ஆலோசித்தோம்.


ஆஸ்திரியாவின் பிரதமராக இருக்கும் என்னைப் பொறுத்தவரை, இந்தியாவின் நிலைபாட்டை தெரிந்துகொள்வதும், அதைப் புரிந்துகொள்வதும், ஐரோப்பிய பிரச்னைகள் குறித்து இந்தியாவுக்கு தெரியப்படுத்துவதும் மிகவும் முக்கியமானது" என்றார்.