தனது 3 நாடுகள் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, எத்தியோப்பியா சென்ற பிரதமர் மோடிக்கு, அந்நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது. இதில் சிறப்பு என்னவென்றால், அந்நாட்டின் உயரிய விருதைப் பெறும் முதல் உலகத் தலைவர் பிரதமர் மோடி என்பதுதான். இந்த விருதை பெற்ற மோடி, அதை இந்திய மக்களுக்கு அர்ப்பணிப்பதாக கூறியுள்ளார்.
பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் உயரிய விருது
எத்தியோப்பியா சென்ற பிரதமர் மோடியை, அந்நாட்டின் பிரதமர் அபி அகமது அலி விமான நிலையத்தில் வரவேற்றார். பின்னர் அவரை தன்னுடன் காரில் அழைத்துச் சென்றார். பின்னர், அவருடனான சந்திப்பின்போது, பேசிய பிரதமர் மோடி, ஆயிரம் ஆண்டுகளாக இரு நாடுகளும், தகவல் தொடர்பு, பரிமாற்றம் உள்ளிட்டவற்றில் ஈடுபட்டு வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், இரு நாடுகளின் ஒத்துழைப்பில், பொருளாதாரம், புதிய கண்டுபிடிப்பு, தொழில் நுட்பம், பாதுகாப்பு, சுகாதாரம், திறன் கட்டமைப்பு மற்றும் பலதரப்பு ஒத்துழைப்பு போன்றவற்றின் முக்கிய அம்சங்களில் விரிவாக கலந்து ஆலோசனை மேற்கொள்வதற்கான ஒரு வாய்ப்பை இன்று நாம் பெற்றுள்ளோம் என அவரிடம் தெரிவித்துள்ளார். இந்தியாவில், எத்தியோப்பிய மாணவர்களுக்கான உதவி தொகையை இரட்டிப்பாக்க முடிவு செய்திருப்பதாகவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து, பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் “தி கிரேட் ஹானர் நிஷான் ஆஃப் எத்தியோப்பியா” என்ற உயரிய விருது வழங்கப்பட்டது. எத்தியோப்பிய பிரதமர் அபி அகமது இந்த விருதை பிரதமர் மோடிக்கு வழங்கி கவுரவித்தார். இதன் மூலம், இந்த விருதை பெறும் முதல் உலகத் தலைவர் என்ற பெருமையை பிரதமர் மோடி பெற்றுள்ளார். அவருக்கு வெளிநாடுகளில் கிடைக்க பெற்ற 28-வது உயரிய விருது இது என்பது குறிப்பிடத்தக்கது.
எத்தியோப்பிய நாடாளுமன்றத்தில் பிரதமர் பேசியது என்ன.?
பின்னர், எத்தியோப்பிய நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, “இந்திய மக்களின் சார்பாக, உங்கள் முன் நிற்பது எனக்கு கிடைத்த பாக்கியம். சிங்கங்களின் பூமியான எத்தியோப்பியாவில் இருப்பது மிகவும் அற்புதமாக இருக்கிறது. நான் வீட்டில் இருப்பது போல் உணர்கிறேன்.“ என்று மோடி கூறினார். மேலும், “எனது சொந்த மாநிலமான குஜராத்தும் சிங்கங்களின் தாயகமாகும். இந்தியாவின் தேசிய பாடலான 'வந்தே மாதரம்' மற்றும் எத்தியோப்பியாவின் தேசிய கீதம் இரண்டும் நமது நிலத்தை தாய் என்று குறிப்பிடுகின்றன.“ என தெரிவித்தார். அதோடு, “அவை பாரம்பரியம், கலாசாரம், அழகு ஆகியவற்றில் பெருமை கொள்ள நம்மைத் தூண்டுகின்றன. மேலும் தாயகத்தை பாதுகாக்கின்றன.“ என்றும் குறிப்பிட்டார்.
மேலும், “இந்தியாவிற்கும், எத்தியோப்பியாவிற்கும் இடையே வலுவான உறவுகள் உள்ளன. இந்த மாபெரும் கட்டடத்தில் உங்கள் சட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. இங்கே மக்களின் விருப்பம் அரசின் விருப்பமாக மாறுகிறது. அரசின் விருப்பம் மக்களின் விருப்பத்துடன் இணக்கமாக இருக்கும்போது, திட்டங்களின் பலன் எளிதில் சென்று அடைகிறது.“ என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், இந்திய நிறுவனங்கள் இன்று எத்தியோப்பியாவில் மிகப்பெரிய வெளிநாட்டு முதலீட்டாளர்களில் ஒன்றாக திகழ்ந்து வருவதாக தெரிவித்த அவர், 140 கோடி இந்திய மக்களின் சார்பாக, நட்பு மற்றும் சகோதரத்துவத்தின் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாகவும், எத்தியோப்பியாவின் உயரிய விருதை பெற்றதில் தான் பெருமை அடைந்ததாகவும் கூறினார். மேலும், இந்திய மக்களின் சார்பாக விருதை கூப்பிய கரங்களுடனும், பணிவுடனும் ஏற்றுக்கொள்வதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.