பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறைப் பயணமாக இன்று ரஷ்யாவுக்கு சென்றடைந்தார். அவருக்கு விமான நிலையத்தில், பாரம்பரிய முறைப்படியான வரவேற்பு அளிக்கப்பட்டது.
ரஷ்யாவில் பிரதமர்:
ரஷ்ய பயணத்திற்கு முன்பு பிரதமர் மோடி தெரிவித்ததாவது, 22-வது இந்திய-ரஷ்ய வருடாந்தர உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷ்யாவிற்கு அரசுமுறைப் பயணத்தை மேற்கொள்கிறேன். எரிசக்தி, பாதுகாப்பு, வர்த்தகம், முதலீடு, சுகாதாரம், கல்வி, கலாச்சாரம், சுற்றுலா உள்ளிட்ட துறைகளில் கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான கூட்டாண்மை முன்னேறியுள்ளது.
எனது நண்பர் அதிபர் விளாடிமிர் புதினுடன், இரு நாடுகளிடையேயான அனைத்து அம்சங்களையும் ஆய்வு செய்யவும், பல்வேறு பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்னைகள் குறித்து பகிர்ந்து கொள்ளவும் நான் ஆவலுடன் உள்ளேன்.
மேலும், ரஷ்யாவில் உள்ள இந்திய சமூகத்தினரை சந்திக்கும் வாய்ப்பையும் இந்தப் பயணம் எனக்கு வழங்கும் என தெரிவித்திருந்தார்.
சிறப்பான வரவேற்பு:
இந்நிலையில், இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்யாவுக்குச் சென்றடைந்தார். அவருக்கு விமான நிலையத்தில், பாரம்பரிய முறைப்படியான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அப்போது, பிரதமர் மோடி வருகையையொட்டி, ரஷ்யாவில் உள்ள பெண்கள் , இந்திய ஆடைகளை அணிந்து இந்திய நடனங்களை ஆடினர்.
இந்திய நடனத்தில் ரஷ்ய சிறுமி:
அதில், ஒரு சிறிய குழந்தை இந்திய நடனமான, பங்க்ரா நடனத்தை ஆடும் காட்சி வெளியாகியுள்ளது. அந்த காட்சியில் ரஷ்ய குழந்தை , மகிழ்ச்சியுடன் உற்சாகமாக ஆடுவதை பார்க்க முடிகிறது.