பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை ரஷியா தலைநகர் மாஸ்கோ சென்றடைந்தார். உக்ரைன் மீது ரஷியா படையெடுத்த பிறகு, பிரதமர் மோடி அங்கு முதல்முறையாக சென்றுள்ளார். ரஷியாவின் முதல் துணைப் பிரதமர் டெனிஸ் மாந்துரோவ் விமான நிலையத்தில் அவரை வரவேற்றார்.


இந்தியாவின் நீண்டகால நண்பன் ரஷியா: மாஸ்கோவை சென்றடைந்த பிறகு பேசிய பிரதமர் மோடி, "நமது நாடுகளுக்கிடையேயான சிறப்பு வாய்ந்த பலன் நிறைந்த வியூக ரீதியான கூட்டணியை மேலும் ஆழப்படுத்த நான் எதிர்நோக்குகிறேன். நமது நாடுகளுக்கு இடையேயான வலுவான உறவுகள் நமது மக்களுக்கு பெரிதும் பயனளிக்கும்" என எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.


ரஷியாவுடன் நீண்ட காலமாக இணக்கமான உறவை பேணி வரும் இந்தியா, கடந்த 20 ஆண்டுகளில் மேற்கத்திய நாடுகளுடனான உறவை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து சென்றுள்ளது. இப்படிப்பட்ட சூழலில் நடந்து வரும் உக்ரைன் போர், ரஷியா - மேற்கத்திய நாடுகளுக்கு இடையேயான மோதலை தீவிரப்படுத்தியுள்ளது.


இந்த நிலையில்தான், ரஷியா மற்றும் மேற்கத்திய நாடுகளை கவனமாக கையாண்டு வருகிறது இந்தியா. இச்சூழலில், நாளை ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார் பிரதமர் மோடி. இது முக்கியத்துவம் வாய்ந்தாக கருதப்படுகிறது.


பிரதமர் மோடி கடைசியாக 2019இல் ரஷியாவுக்குச் சென்றிருந்தார். இந்த ரஷிய பயணத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லிக்கு புதின் வந்திருந்தார். புதினின் இந்திய பயணம் முடிந்து ஒரு சில வாரங்களிலேயே உக்ரைன் போர் தொடங்கிவிட்டது.


 






பிரதமர் மோடியின் பயண திட்டம்:


ரஷிய மாணவர்களின் கலாச்சார நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி நாளை கலந்து கொள்கிறார். சிவப்பு சதுக்கத்தில் ரஷிய ராணுவ வீரர்களின் நினைவிடத்திற்கு மரியாதை செல்ல உள்ளார். ரோசாட்டம் அணுசக்தி மேம்பாடுகள் மற்றும் தொழில்நுட்பத்தின் கண்காட்சியான "ATOM" ஐ அதிபர் புதினுடன் பார்வையிடுகிறார்.


உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி, இரு தரப்பு விவகாரங்கள், உக்ரைன் போர், உலகளாவிய நிகழ்வுகள் குறித்து புதினுடன் உரையாட உள்ளார். அங்கிருந்து, ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவுக்கு செல்ல உள்ளார். கடந்த 41ஆண்டுகளில் வியன்னாவுக்கு செல்லும் முதல் பிரதமர் மோடி என்ற பெருமையை பெற உள்ளார்.