சூடானின் கார்ட்டூமில் இருந்து எத்தியோப்பியாவின் தலைநகர் அடிஸ் அபாபாவுக்குச் சென்ற எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் இரண்டு  விமானிகள் தூங்கியதால் அவர்கள் விமானத்தை தரையிறக்க தவறிவிட்டனர்.


இந்த சம்பவம் திங்களன்று நடந்தது. விமானம் 343 விமான நிலையத்தை நெருங்கியபோது விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு (ATC) எச்சரிக்கையை எழுப்பியது, ஆனால், விமானம் இறங்கவில்லை.


 






இதுபற்றி ஏவியேஷன் ஹெரால்ட் செய்தி வெளியிட்டுள்ளது. விமானிகள் தூங்கிவிட்ட நிலையில், போயிங் 737 இன் தன்னியக்க பைலட் அமைப்பு விமானத்தை 37,000 அடி உயரத்தில் பயணிக்க வைத்ததாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த பயணத்திற்காகத விமானம் புறப்படுவதற்கு முன்பு சுமார் 2.5 மணி நேரம், அது தரையிலேயே இருந்தது.


விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு பலமுறை விமானிகளைத் தொடர்பு கொள்ள முயன்றும் முடியவில்லை. விமானம் தரையிறங்க வேண்டிய ஓடுபாதையைத் தாண்டிச் சென்றபோது, ​​தன்னியக்க பைலட் துண்டிக்கப்பட்டது. இது ஒரு எச்சரிக்கை மணியை அடித்தது. பின்னர்தான், விமானிகள் தூக்கத்தில் இருந்து எழுந்துள்ளனர்.


 






பின்னர், அவர்கள் 25 நிமிடங்களுக்குப் பிறகு ஓடுபாதையில் தரையிறங்குவதற்காக விமானத்தை கவனமாக இயக்கினர். நல்வாய்ப்பாக, யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. விமானமும் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.


விமான கண்காணிப்பு அமைப்பின் தரவு, சம்பவம் நடந்ததையும், விமானம் ஓடுபாதையில் பறந்ததையும் உறுதிப்படுத்தியது. மேலும், விமானத்தின் விமானப் பாதையின் படம் வெளியிடப்பட்டுள்ளது. அதில், அடிஸ் அபாபா விமான நிலையத்திற்கு அருகில் விமானம் சுற்றி கொண்டிருந்ததை பார்க்கலாம்.


இந்த சம்பவம் மிகவும் கவலை அளிப்பதாக விமானப் போக்குவரத்து ஆய்வாளர் அலெக்ஸ் மச்செரஸும் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். விமானியின் சோர்வுதான் இதற்குக் காரணம் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.


மே மாதம் நியூயார்க்கில் இருந்து ரோம் செல்லும் விமானம் 38,000 அடி உயரத்தில் சென்று கொண்டிருந்த போது, இதே போன்று இரண்டு விமானிகள் தூங்கிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.