ட்விட்டர் நிறுவனத்தில் தலைமை நிர்வாகி பராக் அகர்வால் முன்னதாக தங்கள் நிறுவனத்தின் இங்கிலாந்து அலுவலகத்துக்கு கடந்த வாரம் சென்றிருந்தார்.
இந்நிலையில், அங்கிருந்தோரிடம் அவர் காஃபி ஷாப் ஊழியர் போல் ஆர்டர் கேட்கும் வகையிலான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளன.
பராக் அகர்வாலுடன் ட்விட்டர் நிறுவனத்தின் மற்றொரு உயர்மட்ட நிர்வாகியும், நிதி அலுவலருமான நெட் சேகல் அங்கிருந்தோருக்கு பிஸ்கெட்டுகள் பரிமாறும் வகையில் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
ட்விட்டர் நிறுவனத்தின் புதிய சிஇஓ-ஆக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பராக் அகர்வால் பொறுப்பேற்றுக் கொண்டார். முன்னாள் ட்விட்டர் நிறுவனத்தின் சிஇஒவாக ஜேக் டார்சி கடந்த 2015ஆம் ஆண்டு முதல் பதவி வகித்து வந்த சூழலில் அவர் திடீரென அப்பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
இந்திய ஐஐடி நிறுவனங்களில் ஒன்றான ஐஐடி பாம்பேவில் (IIT BOMBAY) பராக் அகர்வால் இளங்கலை பட்டம் முடித்தார். அதன்பின்னர் 2011ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியியலில் முனைவர் பட்டமும் பெற்றார்.
ட்விட்டர் செயற்கை நுண்ணறிவை மேம்படுத்தியவர்
அந்த சமயத்தில் யாஹூ, மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களில் பயிற்சி பெறும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. அதன்பின்னர் 2011ஆம் ஆண்டு ட்விட்டர் நிறுவனத்தில் விளம்பரம் தொடர்பாக செயல்படும் பொறியாளராக பணியில் சேர்ந்தார். அதன்பின்னர் ட்விட்டர் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு பிரிவில் பணியாற்றினார்.
அப்போது ட்விட்டர் தளத்தின் செயற்கை நுண்ணறிவை மேம்படுத்தியதில் முக்கியப் பங்கு இவருக்கு உண்டு. குறிப்பாக பயனாளர்களுக்கு ஏற்ப அவர்களுக்கு ட்வீட்களை காட்டும் செயற்கை நுண்ணறிவுத் திறனை இவர் மேம்படுத்தினார்.
சிடிஓ முதல் சிஇஓ வரை
அது ட்விட்டர் தளம் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் கவர்ந்த தளமாக மாற முக்கியமாக உதவி செய்தது. இந்தத் துறையில் சிறப்பாக பணி செய்ததன் மூலம் பராக் அகர்வால் 2018ஆம் ஆண்டு ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக (சிடிஓ) பொறுப்பை பெற்றார்.
அப்போது முதல் ட்விட்டர் நிறுவனத்தின் சிடிஓவாக ட்விட்டர் தொழில்நுட்பங்களில் பல முக்கிய விஷயங்களை கொண்டு வருவதில் பெரும் பங்கு வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.