இஸ்ரேல் நடத்தி வரும் போரால் பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீனியர்களுக்கு உதவிடும் வகையில் இரண்டாவது  தவணையாக நிதி உதவி வழங்கியுள்ளது இந்தியா. பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் நிவாரண மற்றும் பணி நிறுவனத்திற்கு (UNRWA) 2.5 மில்லியின் அமெரிக்க டாலர்களை இந்தியா வழங்கி இருக்கிறது.


நிலைகுலைந்த பாலஸ்தீனியர்கள்:


பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் தொடுத்து வரும் போர், உலக மக்களின் மனசாட்சியை உலுக்கி வருகிறது. இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே, கடந்த 2023ஆம் ஆண்டு, அக்டோபர் 7ஆம் தேதி, மோதல் தொடங்கியது.


தாக்குதலை ஹமாஸ் தொடங்கியிருந்தாலும், அதற்கு பதில் தாக்குதல் நடத்துகிறோம் என்ற பெயரில் இஸ்ரேல் நடத்தி வரும் போர், அப்பாவி மக்களை கொன்று குவித்து வருகிறது. இஸ்ரேல் நடத்தி வரும் போர் மத்திய கிழக்கு முழுவதும் பரவியுள்ளது. 


போரால் வாழ்க்கையை இழந்து சொந்த நாட்டில் அகதிகளாக உள்ள பாலஸ்தீனியர்களுக்கு உதவிடும் வகையில் ஆண்டுக்கு 5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்கப்படும் என இந்தியா உத்தரவாதம் அளித்திருந்தது. இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் 2024-25 ஆண்டுக்கான மீதமுள்ள 2.5 மில்லியின் அமெரிக்க டாலர்களை இந்தியா வழங்கி உள்ளது.


ஓடோடி சென்று உதவிய இந்தியா:


இதற்கு நன்றி தெரிவித்துள்ள பாலஸ்தீனிய தூதரகம், "இரண்டாவது தவணையாக 2.5 மில்லியன் அமெரிக்க டாலர்களை தந்ததற்கு இந்திய அரசாங்கத்திற்கு எங்களது மனமார்ந்த நன்றியையும் பாராட்டுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.


பாலஸ்தீன அகதிகளின் நலனுக்கான தங்களின் கடமையை நிறைவேற்றி, ஐநாவுக்கு மனிதாபிமான உதவி மற்றும் மருந்துகளைத் தொடர்ந்து வழங்குவதற்கான இந்தியாவின் உறுதிமொழியையும் நாங்கள் அங்கீகரிக்கிறோம்" என தெரிவித்துள்ளது.


இதுகுறித்து பாலஸ்தீன தூதர் அபேத் எல்ராசெக் அபு ஜாசர் கூறுகையில், "இந்தியாவின் ஆதரவை பாலஸ்தீனியர்கள் மதிக்கிறார்கள். விடுதலை, சுதந்திரம் மற்றும் எங்கள் சொந்த அரசை நிறுவுவதற்கான மக்களின் அபிலாஷைகள் நிறைவேறும் வரை அரசியல் மற்றும் பொருள் மட்டங்களில் அதன் தொடர்ச்சியான ஆதரவை எதிர்பார்க்கிறோம்" என்றார்.


பல ஆண்டுகளாக, பாலஸ்தீனிய அகதிகளுக்கான கல்வி, சுகாதாரம், நிவாரணம் மற்றும் சமூக சேவைகள் உட்பட ஐநாவின் முக்கிய திட்டங்கள் மற்றும் சேவைகளுக்கு 40 மில்லியன் டாலர் நிதி உதவியை இந்தியா வழங்கியுள்ளது.


இதையும் படிக்க: "விமானத்தை வேத கால முனிவர்தான் கண்டுபிடிச்சாரு" புது கதையை அவிழ்த்துவிட்ட ஆளுநர்!