Pakistan Train: முடிவுக்கு வந்த ரயில் கடத்தல் - உயிர் தப்பிய 340 பயணிகள் - துப்பாக்கிகளால் பறிபோன உயிர்கள்
Pakistan Train: பாகிஸ்தானில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு இருந்த ரயில் பயணிகள், ராணுவத்தினரால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

Pakistan Train: பாகிஸ்தானில் ரயில் கடத்தப்பட்ட சம்பவத்தில் பயணிகள் 21 பேரும், தீவிரவாதிகள் 33 பேரும் உயிரிழந்தனர்.
340 பயணிகள் மீட்பு:
பலுசிஸ்தான் மாகாணத்தில் கடத்தப்பட்ட ரயிலில் இருந்து அனைத்து தீவிரவாதிகளையும் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் கொன்று, 190 பணயக்கைதிகளை மீட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்ட பலூச் போராளிகளை ஒழிக்கும் நடவடிக்கை நிறைவடைந்துள்ளதாக இன்டர்-சர்வீசஸ் பப்ளிக் ரிலேஷன்ஸ் (ISPR) டைரக்டர் ஜெனரல் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரிப் சவுத்ரி தெரிவித்தார். அங்கு இருந்த அனைத்து பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்தார். ராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரீப், துன்யா நியூஸ் டிவியிடம் பேசுகையில், பலூச் போராளிகள் பிணைக் கைதிகளாக வைத்திருந்த 21 பயணி மற்றும் நான்கு துணை ராணுவ வீரர்கள் என 28 பேர் கொல்லப்பட்டதாக முதலில் கூறினார். தொடர்ந்து, "(புதன்கிழமை) மாலையில் அனைத்து பயங்கரவாதிகளையும் கொன்று அனைத்து பயணிகளையும் பாதுகாப்பாக மீட்டதன் மூலம் ஆயுதப்படைகள் வெற்றிகரமாக நடவடிக்கையை முடித்தன" என்று லெப்டினன்ட் ஜெனரல் ஷெரீப் கூறினார். மொத்தமாக இந்த நடவடிக்கையின் போது 346 பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர், 30க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
Just In




கடத்தப்பட்டது எப்படி?
ஒன்பது பெட்டிகளில் 440 பயணிகளை ஏற்றிச் சென்ற ஜாஃபர் எக்ஸ்பிரஸ், குவெட்டாவிலிருந்து பெஷாவருக்குச் சென்று கொண்டிருந்தபோது, பலூச் விடுதலைப் படை (BLA) ரயிலைத் தாக்கியது. வெடிபொருட்களை கொண்டு ரயிலை தடம் புரள செய்து, குவெட்டாவிலிருந்து 160 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு சுரங்கப்பாதையில் குடலார் மற்றும் பிரு குன்ரி மலைப்பகுதிக்கு அருகே கடத்தியது. கடத்தல் சம்பவத்தில் 70 முதல் 80 பயங்கரவாதிகள் ஈடுபட்டதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. ரயில் கடத்தல் சம்பவத்திற்கு தனது முதல் எதிர்வினையாக, டஜன் கணக்கான பயங்கரவாதிகள் 'நரகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்' என்று கூறிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், அப்பாவி உயிர்களை இழந்ததால் மிகவும் அதிர்ச்சியடைந்ததாகவும் கூறினார்.
எதற்காக கடத்தல்?
ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரானின் எல்லையை ஒட்டிய பலுசிஸ்தானில் இயற்கை வளங்களை வெளியாட்கள் சூறையாடுவதாகக் குற்றம் சாட்டும் பிரிவினைவாத குழுக்களின் தாக்குதல்கள் கடந்த சில ஆண்டுகளில் அதிகரித்துள்ளன. பெரும்பாலும் மாகாணத்திற்கு வெளியே உள்ள பாதுகாப்புப் படையினர் மற்றும் இனக்குழுக்களை குறிவைத்து நடத்தப்படுகின்றன. தங்களை தனி நாடாக விடுவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், சிறையில் உள்ள தங்கள் அமைப்பைச் சார்ந்தவர்களை விடுவிக்க வேண்டும் என்ற நோக்கில் BLA இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. ஆனால், 30 மணி நேர போராட்டத்திற்கு பிறகு இந்த கடந்தல் சம்பவம் முடிவுக்கு வந்துள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் சொல்வது என்ன?
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், "ஜாஃபர் எக்ஸ்பிரஸ் மீதான கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலின் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து எனக்கு விளக்கிய முதலமைச்சர் சர்ஃபராஸ் புக்தியுடன் பேசினேன். இந்த கொடூரமான செயலால் முழு தேசமும் ஆழ்ந்த அதிர்ச்சியடைந்துள்ளது, அப்பாவி உயிர்களை இழந்ததால் வருத்தமடைந்துள்ளது - இதுபோன்ற கோழைத்தனமான செயல்கள் பாகிஸ்தானின் அமைதிக்கான உறுதியை அசைக்க முடியாது. தியாகிகளின் குடும்பங்களுக்கு எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அல்லாஹ் அவர்களுக்கு ஜன்னாவில் மிக உயர்ந்த பதவிகளை வழங்குவானாக, காயமடைந்தவர்கள் விரைவாக குணமடைய ஆசீர்வதிப்பாராக. டஜன் கணக்கான பயங்கரவாதிகள் நரகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்," என்று ஷெபாஸ் ஷெரீப் குறிப்பிட்டு இருந்தார்.