பாகிஸ்தானில் தீவிரவாதிகள் குழு ஒன்று ரயிலை கடத்தியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் தென்மேற்கு மாகாணமான பலுசிஸ்தானில் பலுச் விடுதலை ராணுவம் என்ற தீவிரவாதிகள் குழு, இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். குவெட்டா நகரில் இருந்து பெஷாவர் வரை தினமும் இயக்கப்படும் ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயிலை பலுச் விடுதலை ராணுவம் என்ற தீவிரவாதிகள் குழு கடத்தியுள்ளது. ரயிலில் சென்ற 100க்கும் மேற்பட்ட பயணிகளை தீவிரவாதிகள் கடத்தியுள்ளனர். கடத்தலின்போது 6 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதுதொடர்பான மேலும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

பலுசிஸ்தான் தீவிரவாதிகள்:

பாகிஸ்தானில் இருந்து பலுசிஸ்தான் மாகாணத்தை பிரித்து, தனி நாடாக உருவாக்க வேண்டும் என பலுச் விடுதலை ராணுவம் கோரி வருகிறது. 

இந்த நிலையில், பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவெட்டா நகரிலிருந்து கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள பெஷாவருக்கு ஒன்பது பெட்டிகளில் 400க்கும் மேற்பட்ட பயணிகள் ஜாஃபர் எக்ஸ்பிரஸில் பயணம் மேற்கொண்டிருந்தனர். அப்போது, ரயில் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். பின்னர், ரயிலை நிறுத்தி அதில் தீவிரவாதிகள் ஏறியுள்ளனர். 

இதுகுறித்து பலுச் விடுதலை ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் ஜீயந்த் பலுச் வெளியிட்ட அறிக்கையில், "பாகிஸ்தான் படைகள் ராணுவ நடவடிக்கையைத் தொடங்கினால் பணயக்கைதிகள் கொல்லப்படுவார்கள்.

ரயில் கடத்தல்:

எந்தவொரு ராணுவ நடவடிக்கைக்கும் சமமான வலுவான பதிலடி வழங்கப்படும். இதுவரை, ஆறு ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் நூற்றுக்கணக்கான பயணிகள் எங்கள் கட்டுப்பாட்டில் உள்ளனர். இந்த நடவடிக்கைக்கு பலூச் விடுதலை ராணுவம் முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறது" என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து ராணுவ அதிகாரிகள் கூறுகையில், "பலுசிஸ்தானின் போலன் மாவட்டத்தின் முஷ்காஃப் பகுதியில், சம்பவம் நடந்த இடத்தை பாதுகாப்புப் படையினர் அடைந்துள்ளனர்" என தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, பலுசிஸ்தான் அரசாங்கம் அவசரகால நடவடிக்கைகளை விதித்துள்ளது. நிலைமையைச் சமாளிக்க அனைத்து படைகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் மிகப்பெரிய மாகாணமாக பலுசிஸ்தான் உள்ளது. இது நாட்டின் மொத்த நிலப்பரப்பில் கிட்டத்தட்ட 44 சதவீதத்தை உள்ளடக்கியது. ஆனால், மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாகாணமாக உள்ளது. இங்குதான், உலகின் மிகப்பெரிய ஆழ்கடல் துறைமுகங்களில் ஒன்றான குவாதர் அமைந்துள்ளது. பிராந்திய அளவிலும் உலகளாவிய வர்த்தக ரீதியிலும் இந்த மாகாணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பாகிஸ்தான் கருதுகிறது.