Pakistan Moon: நிலவுக்கு விண்கலத்தை அனுப்பும் பாகிஸ்தான்: நல்ல பெயரை சொன்னால் 1 லட்சம் பரிசு!
Pakistan's Moon Mission: நிலவில் ரோவரை கொண்டு சென்று, பல ஆராய்ச்சிகளை மேற்கொள்ளப்போவதாக பாகிஸ்தான் விண்வெளி நிலையம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தானின் முதல் நிலவுத் திட்டத்தை 2028 ஆம் ஆண்டு செயல்படுத்த உள்ளதாக பாகிஸ்தான் விண்வெளி ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானும், சீனாவும் விண்வெளி தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளன. அதன் மூலம், சாங்'இ 8 என்ற திட்டத்தின் மூலம் சீனா ராக்கெட் மூலம் பாகிஸ்தானின் முதல் நிலவுக்கான ரோவரை அனுப்ப திட்டமிடப்பட்டிருக்கிறது. 2028 இல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ள Chang'E 8 திட்டத்தில், நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதில் கவனம் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெயர் வைக்கும் போட்டி:
இந்நிலையில் நிலவுக்கு முதன் முதலாக ரோவரை, பாகிஸ்தான் அனுப்ப உள்ள நிலையில், அதற்கு பெயரிடுவதற்கான போட்டியை பாகிஸ்தான் தொடங்கியுள்ளது. "பாகிஸ்தானின் லூனார் ரோவர்" என்ற கருப்பொருளின் கீழ், மாணவர்கள், விண்வெளிஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள், தங்களது பரிந்துரைகளை வழங்குமாறு அறிவித்துள்ளது.
இது, பாகிஸ்தானின் விண்வெளிப் பயணத்தின் ஒரு பகுதியாக இருப்பதற்கும், வரலாற்றில் உங்கள் முத்திரையைப் பதிப்பதற்கும், இது உங்களுக்குஒரு வாய்ப்பாகும் எனவும் பாகிஸ்தான் விண்வெளி ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது. வெற்றியாளருக்கு, தேசிய அங்கீகாரத்துடன் பாகிஸ்தானிய ரூபாய் மதிப்பில் 1,00,000 ரொக்கப் பரிசு வழங்கப்படும். பெயரை சமர்ப்பிக்க கடைசி நாள் மார்ச் 15 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலவில் பல்வேறு ஆராய்ச்சிகள்
The Express Tribune செய்தி நிறுவனம் செய்தியின்படி, “ சீனாவின் Chang'E 8 திட்டமானது, சர்வதேச சந்திர ஆராய்ச்சி நிலையத்தின்(ILRS) திட்டத்தின் ஒரு பகுதியாகும். இதன் மூலம், நிலவின் மேற்பரப்பை ஆராய்வது, ஆராய்ச்சி செய்வது, நிலவு மண்ணின் ஆய்வு, நிலவின் மேற்பரப்பை வரைபடமாக்குதல் மற்றும் நிலவில் நிலையான மனித இருப்புக்கான புதிய தொழில்நுட்பங்களை சோதித்தல் உள்ளிட்ட தொடர்ச்சியான அறிவியல் சோதனைகளை மேற்கொள்ள திட்டமிட்டிருக்கிறது.
இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, பாகிஸ்தானின் ரோவரும் அனுப்பப்பட்டு, குறிப்பிடத்தக்க ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம், சீனாவில் உள்ள ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவுகணை மையத்தில் இருந்து தனது முதல் தற்சார்பு முறையில் தயாரிக்கப்பட்ட கண்காணிப்பு செயற்கைக்கோளை, பாகிஸ்தான் அனுப்பியது குறிப்பிடத்தக்கது. அந்த செயற்கைக்கோள் பாகிஸ்தானின் இயற்கை வளங்களைக்கண்காணிக்கவும் நிர்வகிக்கவும், நகர்ப்புற திட்டமிடல்மற்றும் விவசாய மேம்பாட்டை மேம்படுத்தவும் உதவும் என்று பாகிஸ்தான் விண்வெளிமையம் தெரிவித்திருந்தது
வாழ்த்துகள்
நிலவை நோக்கிய இந்தியாவின் முதல் பயணமான சந்திரயான்-1, கடந்த அக்டோபர்22, 2008 அன்று ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக ஏவப்பட்ட நிலையில், 20 வருடங்களுக்கு பிறகு பாகிஸ்தான், நிலவுக்கான திட்டத்தை தொடங்கியுள்ளது. இந்நிலையில், அறிவியல் ஆர்வலர்கள் பலரும் பாகிஸ்தான் விண்வெளி நிலையத்திற்கு, வெற்றிபெற வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.