பாகிஸ்தானில் நேற்று காலை போலீஸ் வேன் மீது வாகனம் ஒன்று மோதியதில் நேற்று விபத்து ஏற்பட்டது. பலுசிஸ்தான் மாகாணம் லாஸ்பேலா அருகே குவெட்டா-கராச்சி நெடுஞ்சாலையில் காவல்துறை அதிகாரிகள் சென்ற வேன் மீது வாகனம் மோதியது.


பாகிஸ்தானில் சாலை விபத்து: இந்த விபத்தில் 5 காவல்துறை அதிகாரிகள் மரணம் அடைந்தனர். மேலும், இருவர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து லாஸ்பேலா மூத்த காவல் கண்காணிப்பாளர் கேப்டன் நவீத் ஆலம் கூறுகையில், "உத்தல் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இந்த விபத்து நடந்துள்ளது.


வாகனம் மோதியதில் போலீஸ் வேன் கவிழ்ந்தது. மூன்று போலீசார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், மேலும் இருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர். அவர்களின் உடல்களையும் காயமடைந்தவர்களையும் முதலில் உத்தால் மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். காயமடைந்த போலீசார் தற்போது மேல் சிகிச்சைக்காக கராச்சிக்கு மாற்றப்பட்டுள்ளனர்" என்றார்.


தொடர்ந்து பேசிய நவீத் ஆலம், "கொல்லப்பட்ட போலீசாரின் உடல்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. போலீஸ் வேன் மீது மோதிய அடையாளம் தெரியாத வாகனத்தை தேடும் பணி நடந்து வருகிறது" என்றார்.


விபத்து குறித்து அறிக்கை வெளியிட்ட பலுசிஸ்தான் முதலமைச்சர் சர்ப்ராஸ் புக்டி, "காவல்துறை அதிகாரிகள் மரணம் அடைந்ததற்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். இந்த வேதனையான நேரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் மாகாண அரசாங்கம் துணை நிற்கிறது" என்றார்.


காயமடைந்த போலீசாருக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதுடன், அவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்தாக தெரிவித்தார். இந்த மாத தொடக்கத்தில், மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் பயணிகள் ரயில் பெட்டியில் தீப்பிடித்து எரிந்தது. இதில், மூன்று பேர் உயிரிழந்தனர். 12 பேர் காயமடைந்தனர்.


தொடர்ந்து அதிகரிக்கும் சாலை விபத்துகள்: உலகம் முழுவதும் சாலை விபத்துகள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக, இந்தியாவில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்தியாவில் 2021ஆம் ஆண்டு 4,12,432 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இதில் 1,53,972 பேர் மரணம் அடைந்துள்ளனர். 3,84,448 பேர் காயம் அடைந்துள்ளனர்.


கடந்த 2020-ம் ஆண்டை விட 2021-ம் ஆண்டில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2020-ம் ஆண்டு இந்தியாவில் 3,84,448 விபத்துகளில் 1,31,714 பேர் மரணம் அடைந்தனர். 3,48,279 பேர் காயம் அடைந்தனர்.


2021-ம் ஆண்டு தமிழகத்தில் 55,682 விபத்துகள் பதிவாகி உள்ளது. இதன்படி, அதிக விபத்துகள் பதிவான மாநிலங்களில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. 2020-ம் ஆண்டை விட 2021-ம் ஆண்டில் 10,000 சாலை விபத்துகள் அதிகமாக நிகழ்ந்துள்ளன.


2021-ம் தமிழகத்தில் நடந்த சாலை விபத்துகளில் 15,384 பேர் மரணம் அடைந்தனர். இதன்படி அதிக மரணங்கள் பதிவான மாநிலங்களில் தமிழகம் 2-ம் இடத்தில் உள்ளது. 2020-ம் ஆண்டை விட 2021-ம் ஆண்டில் 5,000 மரணங்கள் அதிகரித்துள்ளது.