அமெரிக்க சிறையில் மர்மமான முறையில் இறந்த பாலியல் குற்றவாளியான எப்ஸ்டீன் சம்பந்தப்பட்ட கோப்புகளில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் பெயரும் இருப்பதாக, ஒரு பெரிய குண்டை தூக்கி போட்டுள்ளார் எலான் மஸ்க். அந்த எப்ஸ்டீன் யார் தெரியுமா.? பார்க்கலாம்..
எலான் மஸ்க்கின் பதிவு என்ன.?
அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப்பிற்கு பெருமளவில் உதவிகள் செய்து, அவர் அதிபராவதற்கு பெரும் பங்காற்றினார் எலான் மஸ்க். பின்னர் ட்ரம்ப் வெற்றி பெற்ற நிலையில், அதிபராக பொறுபேற்ற பின், அரசு செயல்திறன் துறை(DOGE) என்ற ஒன்றை உருவாக்கி, அதற்கு தலைவராக எலான் மஸ்க்கை நியமித்தார்.
அதன் பின் அதிரடியாக செயல்பட்ட எலான் மஸ்க், பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வந்தார். அதற்கு ஒருபுறம் பலத்த எதிர்ப்புகளும் எழுந்தன. இப்படியே போய்க்கொண்டிருந்த நேரத்தில், அரசின் மீதே அதிக கவனம் செலுத்தியதால், மஸ்க்கின் நிறுவனங்கள் சிக்கலை சந்தித்தன. அவரது டெஸ்லா நிறுவனம் சரிவை நோக்கி சென்றுகொண்டிருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த மஸ்க், தனது பெரும்பாலான நேரத்தையும், கவனத்தையும் தனது நிறுவனங்கள் மீது செலுத்தப் போவதாக அறிவித்தார். இதையடுத்து, ட்ரம்ப்பிற்கும் அவருக்கும் இடையே சிறிய விரிசல் ஏற்பட்டது. இந்நிலையில், சமீபத்தில் அரசு செயல்திறன் துறையிலிருந்து விலகினார் மஸ்க்.
இதைத் தொடர்ந்து, மஸ்க் - ட்ரம்ப் இடையே மோதல் போக்கு ஏற்பட்டு, சமூக வலைதளத்தில் மாறி மாறி பதிவுகளை போட்டு வருகின்றனர். இந்த சூழலில் தான், தற்போது ட்ரம்ப்பிற்கு ஆப்பு வைக்கும் அளவிற்கு ஒரு பதிவை போட்டுள்ளார் எலான் மஸ்க்.
அதில், உண்மையிலேயே பெரிய குண்டு ஒன்றை போட வேண்டிய நேரமிது என்று குறிப்பிட்டு, எப்ஸ்டீன் கோப்புகளில் ட்ரம்ப்பின் பெயர் உள்ளது என குறிப்பிட்டுள்ளார். அந்த கோப்புகள் பொதுவெளியில் வராததற்கு அது தான் உண்மையான காரணம் என்றும் மஸ்க் தெரிவித்துள்ளார். அதோடு, ட்ரம்ப்பை நக்கலடிக்கும் விதமாக, இந்த நாள் உங்களுக்கு நல்ல நாளாக அமையட்டும் என்றும் ட்ரம்ப்பிற்கு தெரிவித்துள்ளார்.
இந்த பதிவின் கமெண்ட்டில், இந்த பதிவை குறித்து வைத்துக் கொள்ளுங்கள், உண்மை வெளியே வரும் என்றும் மஸ்க்கே பதிவிட்டுள்ளார். மேலும், ட்ரம்ப் பதவி நீக்கம் செய்யப்பட்டு, அவருக்கு பதிலாக ஜே.டி. வான்ஸ் பதவியேற்க வேண்டும் என்று வந்த ஒரு கமெண்ட்டை மேற்கோள் காட்டி, ஆமாம் என கூறியுள்ளார் மஸ்க்.
இதைத் தொடர்ந்து, மஸ்க்கின் பதிவு மிகப் பெரும் பேசுபொருளாகியுள்ளது. தற்போது எப்ஸ்டீன் யார் என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது.
யார் அந்த எப்ஸ்டீன்.?
அமெரிக்காவின் பிலபல நிதியாளரான ஜெஃப்ரி எப்ஸ்டீன், பாலியல் குற்றவாளியாகவும் அறியப்பட்டவர். பெரும் நிறுவனங்களுக்கு வங்கி நிதிகளை பெற்றுத் தருவது தவிர, வங்கியாளராகவும் பணியாற்றி வந்தார் எப்ஸ்டீன். இதனால், பெரும் தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் என அவருடைய நட்பு வட்டமும் பெரியதாகவே இருந்தது.
இந்நிலையில், கடந்த 2005-ம் ஆண்டு தொடங்கி, இவர் மேல் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. கரீபியனில் உள்ள எப்ஸ்டீனுக்கு சொந்தமான தீவு ஒன்றில், சிறுமிகளை அவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, இந்த வழக்கில் கடந்த 2008-ம் ஆண்டு அவருக்கு குறைந்த நாட்கள் தண்டனை வழங்கப்பட்டது.
பின்னர் விடுதலையான எப்ஸ்டீன் மீது, 2019-ல் கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்ததால், மீண்டும் கைதானார். அதைத் தொடர்ந்து தண்டனை பெற்ற அவர், 2019 ஆகஸ்ட் மாதத்தில், நியூயார்க் சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்தார். ஆனாலும், அவர் தற்கொலை செய்துகொண்டதாக அறிவிக்கப்பட்டது.
எப்ஸ்டீன் வெளியே வந்தால், பல முக்கியமான பெரிய புள்ளிகள் சிக்குவார்கள் என்பதால், அவரது இறப்பில் சந்தேகங்கள் இருந்து வந்தன. சிறையிலேயே அவர் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது.
எப்ஸ்டீன் தொடர்பான ஆவணக் கோப்புகளில் பிரபலங்களின் பெயர்கள் இடம்பெற்றிருப்பதாக கூறப்படும் நிலையில், இதுவரை அந்த வழக்கின் ஆவணங்கள் பொதுவெளியில் வெளியிடப்படவில்லை.
இந்த எப்ஸ்டீன் ஆவணங்களில்தான், டொனால்ட் ட்ரம்ப்பின் பெயர் இடம்பெற்றிருப்பதாக எலான் மஸ்க் தற்போது தெரிவித்துள்ளார். இதனால், பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.