சென்னை மாநகராட்சியில் முதல் முறையாக பாஜக வேட்பாளர் உமா ஆனந்தன் (வார்டு எண்: 134) நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த கவுன்சிலர், மகாத்மா காந்தியை படுகொலை செய்த நாதுராம் கோட்சேவின் ஆதரவாளர் என்று கூறி சர்ச்சையில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை மாநகராட்சியில் பாஜக வேட்பாளர் உமா ஆனந்தன் வெற்றி பெற்றதை தொடர்ந்து அக்கட்சியின் முன்னாள் தேசியச் செயலாளர் எச். ராஜா தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக வாழ்த்துகளை பதிவிட்டுள்ளார்.அதில், "சென்னை வார்டு 134 வது வார்டில் வெற்றி பெற்று சென்னையில் பாஜக கணக்கை துவங்கியுள்ள திருமதி. உமா அனந்தன் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மாலை 5.00 மணி நிலவரப்படி, தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. திமுக கூட்டணி கட்சிகள் 95%க்கும் அதிகமான இடங்களை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. 21 மாநகராட்சிகளிலும் தொடர்ந்து பெருவாரியான வார்டுகளை திமுக கூட்டணி கைப்பற்றி வருகிறது. திமுக கூட்டணி 95 சதவீதத்துக்கும் அதிகமான நகராட்சி மற்றும் பேரூராட்சிகளை கைப்பற்றியது.
அதிமுகவின் கோட்டையாக விளங்கிய பல பகுதிகளிலும் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றதால் அக்கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள், நிர்வாகிகள், ஆதரவாளர்கள் பல இடங்களில் பட்டாசு வைத்து, இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். மேலும், திமுக நிர்வாகிகள் முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்தனர்.
மக்களவை, சட்டப்பேரவை, ஊரக உள்ளாட்சியைத் தொடர்ந்து நகர்ப்புற தேர்தலில் திமுக அமோக வெற்றியை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்