பிரதமர் மோடி குறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ அவதூறாக பேசியது இருநாடுகளிக்கிடையே பெரும் பிரச்னையை கிளப்பியுள்ளது. 


இச்சூழலில், இரு நாடுகளுடனும் பலதரப்பட்ட உறவை பேணி வருவதாகவும் எனவே இந்த விவகாரத்தில் அந்தந்த நாட்டு மக்களின் நலனுக்காக இந்திய, பாகிஸ்தான் வார்த்தை போரில் மோதி கொள்ளாமல் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.


காஷ்மீர், எல்லை தாண்டிய பயங்கரவாதம் ஆகிய விவகாரங்களால் இந்திய, பாகிஸ்தான் நாடுகளுக்கிடையேயான உறவில் பெரும் பிரச்னை ஏற்பட்டுள்ளது.


இந்நிலையில், நியூ யார்க்கில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் தினசரி செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டார். அப்போது, அவரிடம் பிரதமர் மோடி குறித்து பாகிஸ்தான் அமைச்சர் பிலாவல் தெரிவித்த கருத்து பற்றி கேள்வி முன்வாக்கப்பட்டது.


அதற்கு பதில் அளித்து பேசிய அவர், "இந்தியாவுடன் உலகளாவிய வியூக ரீதியான கூட்டுறவை நாங்கள் கொண்டுள்ளோம். பாகிஸ்தானுடன் நாம் கொண்டுள்ள ஆழமான கூட்டாண்மை குறித்தும் பேசியுள்ளேன். ஒருவரின் வெற்றி மற்றொருவரின் தோல்வி என்ற அடிப்படையில் உறவுகளை பேணவில்லை. நாம் அவர்களை ஒன்றுக்கொன்று தொடர்புபடுத்தி பார்க்கவில்லை.


இந்த உறவு ஒவ்வொன்றும் அமெரிக்காவிற்கு இன்றியமையாதது. இந்தியா மற்றும் பாகிஸ்தானுடன் அமெரிக்கா கொண்டிருக்கும் பகிரப்பட்ட இலக்குகளை மேம்படுத்துவதற்கும் பின்பற்றுவதற்கும் இந்த உறவு அவசியமானது.


நாங்கள் இரு நாடுகளுடனும் கூட்டு வைத்துள்ளதால், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே வார்த்தைப் போர் வெடிப்பதை காண விரும்பவில்லை. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஆக்கப்பூர்வமான உரையாடலைக் காண விரும்புகிறோம். பாகிஸ்தான் மற்றும் இந்திய நாடுகளின் முன்னேற்றத்திற்காக நாங்கள் இதை நினைக்கிறோம். இருதரப்பு ரீதியாக நாம் இணைந்து செய்யக்கூடிய பல வேலைகள் உள்ளன. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன. இரண்டு நாடுகளுக்கும் கூட்டாளியாக உதவ அமெரிக்கா தயாராக உள்ளது" என்றார்.


ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் காஷ்மீர் விவகாரத்தை பாகிஸ்தான் எழுப்பியிருந்தது. சீர்திருத்தப்பட்ட பலதரப்பு உறவு என்ற தலைப்பில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உரையாற்றிய பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ, காஷ்மீர் விவகாரம் குறித்து எழுப்பினார்.


இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், "கொல்லப்பட்ட அல் கொய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா பின் லேடனை விருந்தாளியாக வைத்து கொண்டு, அண்டை நாட்டின் நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய நாட்டிற்கு ஐ.நா.வில் மற்ற நாடுகளுக்கு பாடம் எடுக்க தகுதி இல்லை" என்றார்.


ஜெய்சங்கரின் கருத்துக்கு பிலாவல் பூட்டோ கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ளார். மேலும், பிரதமர் மோடி குஜராத்தின் கசாப்புக் கடைக்காரர் என அவர் விமர்சித்திருந்தார்.