பாகிஸ்தான் நாட்டின் ஒன்றிய திட்டமிடுதல் மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சர் அஹ்சான் இக்பால் நாட்டு மக்களிடம் டீ குடிப்பதைக் குறைக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளதுடன், அதனால் அரசு விரைவில் இறக்குமதிச் சட்டத்தைக் கட்டுப்படுத்த முடியும் எனக் கூறியுள்ளார். 


`டீ இறக்குமதிக்காகவும் நாம் கடன் பெறுவதால், மக்கள் தினமும் குடிக்கும் டீயின் அளவைக் குறைக்க வேண்டும்’ என பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியுள்ளார். மேலும், வியாபாரம் செய்பவர்கள் தங்கள் கடைகளை இரவு 8.30 மணிக்கு மூடுவதன் மூலமாக மின்சாரத்தைச் சேமிக்க முடியும் எனவும் அவர் பரிந்துரைத்துள்ளார். 


பாகிஸ்தான் நாட்டில் அந்நியச் செலாவணிக்கான சேமிப்புகள் படிப்படியாக குறைந்து வருகின்றன. தற்போதைய சூழலில், இரண்டு மாதங்களுக்கான இறக்குமதி பொருள்களை மட்டுமே வாங்க முடியும் என்ற நிலையில் பாகிஸ்தான் இருக்கும் சூழலில் தற்போது நிதியை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது அந்நாடு. 





 


கடந்த நிதியாண்டை விட இந்த நிதியாண்டில் பாகிஸ்தான் நாடு சுமார் 13 பில்லியன் பாகிஸ்தான் ரூபாய் மதிப்பிலான டீத்தூளை இறக்குமதி செய்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், கடந்த 2020-21ஆம் நிதியாண்டில், சுமார் 70.82 பில்லியன் பாகிஸ்தான் ரூபாய் பணம் டீ இறக்குமதிக்காக செலவு செய்யப்பட்டுள்ளது.


பாகிஸ்தான் நாடு தற்போது தீவிரமான பொருளாதார சிக்கலில் இருக்கும் நிலையில், அந்நாட்டின் அந்நியச் செலாவணி இருப்பு தற்போது 10 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் குறைவாக மாறியிருப்பதால், அந்நாட்டின் தலைவர்கள் சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெறும் சூழல் உருவாகியுள்ளது. 


கடந்த மாதம், பாகிஸ்தானின் கராச்சி பகுதியில் நாட்டின் நிதியைக் காக்கும் பொருட்டு பல்வேறு அத்தியாவசியமற்ற ஆடம்பரப் பொருள்களின் இறக்குமதி தடுக்கப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் பாகிஸ்தான் நாட்டின் பிரதமராக ஷேபாஸ் ஷெரிப் முந்தைய பிரதமர் இம்ரான் கானை நாடாளுமன்றத் தேர்தலில் தோற்கடித்து ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், இந்தப் பொருளாதார சிக்கல் பாகிஸ்தான் அரசுக்குப் பெரிய சவாலாக அமைந்துள்ளது. 



இம்ரான் கான் அரசு பதவி விலகியுடன், புதிதாக பதவியேற்ற ஷேபாஸ் ஷெரிப் இம்ரான் கானின் அரசு நாட்டின் பொருளாதாரத்தைச் சரியாக மேலாண்மை மேற்கொள்ளவில்லை எனவும், மீண்டும் பாகிஸ்தானை சரிசெய்வது மிகப்பெரிய சவாலாக இருக்கும் எனவும் தெரிவித்திருந்தார். 


பாகிஸ்தான் நாட்டிற்கான கடன் வழங்குவதற்கான பேச்சுவார்த்தையை மேற்கொள்ள அந்நாட்டின் தற்போதைய 2022-23ஆம் நிதியாண்டின் பட்ஜெட் ஆவணத்தை முக்கியமானதாகக் கருதுகிறது ஐ.எம்.எஃப் என்றழைக்கப்படும் சர்வதேச நாணய நிதியம்.


கடந்த ஜூன் 12 அன்று, பாகிஸ்தான் தற்போதைய 2022-23ஆம் ஆண்டின் 47 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பட்ஜெட் அறிக்கையைத் தாக்கல் செய்திருந்தது. அதில் சர்வதேச நாணய நிதியத்தை ஈர்த்து கடன் பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் பாகிஸ்தான் அரசு நம்பிக்கையுடன் இருக்கிறது.