Imran Khan: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானிற்கு ஜாமின் கிடைத்தும் விடுதலையாவில் சிக்கல் இருப்பதாக கூறப்படுகிறது.
இம்ரான் கானிற்கு ஜாமின்:
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் அரசு ரகசியங்கள் கசியவிட்டதாக தொடரப்பட்ட வழக்கில், அவருக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஜாமீன் வழங்கியது. அதேநேரம், ஊழல் வழக்கில் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ளதால், தற்போதைக்கு அவரால் வெளியே வர முடியாத சூழல் நிலவுகிறது. 2018 முதல் 2022ம் ஆண்டு வரை பிரதமராக இருந்த காலத்தில் அவருக்கு கிடைத்த பரிசுகளை சட்டவிரோதமாக விற்ற வழக்கில், கடந்த ஆகஸ்ட் மாதம் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பிறகு தற்போது வரை இம்ரான் கான் பொதுவெளியில் எங்கும் தோன்றவில்லை. முன்னாள் கிரிக்கெட் வீரரான 71 வயதான் இம்ரான் கான் கடந்த 2022ம் ஆண்டு தனது பிரதமர் பதவியை இழந்தது முதலே பல்வேறு குற்றச்சாட்டுகளை தொடர்ந்து எதிர்கொண்டு வருகிறார்.
நீதிமன்றம் சொல்வது என்ன?
ஊழல் குற்றச்சாட்டின் காரணமாக வரும் பிப்ரவரி 8 ஆம் தேதி நடைபெறவிருக்கும் தேசியத் தேர்தல்களில் போட்டியிட கான் தகுதியற்றவர் என்ற உத்தரவை ரத்து செய்ய நீதிமன்றம் மறுத்துவிட்டது. இருப்பினும், அவர் ஒரு வெளிநாட்டு சக்திக்கு ஆதாயமளிக்கும் நோக்கத்தில் அரசு ரகசியங்களை கசியவிட்டதாகக் கூற போதுமான ஆதாரங்களை கண்டுபிடிக்க முடியவில்லை எனவே, இம்ரான் கான் தேர்தல் காலத்தில் ஜாமினில் விடுவிக்கப்படுவது தேர்தல் சரியான முறையில் நடைபெறுவதை உறுதி செய்யும். இதனால் மக்கள் தங்கள் விருப்பத்தை திறம்பட மற்றும் அர்த்தத்துடன் வெளிப்படுத்தும் உரிமையைப் பயன்படுத்த முடியும். மேலும், ஜாமீன் சலுகையை நிராகரிக்க விதிவிலக்கான சூழ்நிலைகள் எதுவும் இல்லை" எனக் கூறி இம்ரான் கானுக்கு நீதிபதிகள் ஜாமின் வழங்கியுள்ளனர். ஆனால், 3 ஆண்டுகள் சிறைதண்டனை மட்டுமின்றி இம்ரான் கானுக்கு எதிராக பல்வேறு கைது வாரண்ட்கள் நிலுவையில் இருப்பதால் அவரது விடுதலை கேள்விக்குறியாகவே உள்ளது.
தேர்தல் பணிகள் தீவிரம்:
தேர்தலில் போட்டியிட தடை இருந்தும் இம்ரான் கான் சார்பில் வேட்புமனுதாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரால் தேர்தலில் போட்டியிட முடியாவிட்டாலும், ஜாமீனில் வெளிவருவது அவரது கட்சிக்கு பெரும் சாதகமாக இருக்கும். தேர்தலுக்கு முன்னதாக அதன் பரப்புரையை தீவிரப்படுத்த உதவும். இம்ரன் கான் பாகிஸ்தானில் மிகவும் பிரபலமான தலைவராக இருப்பதோடு, யாரும் எதிர்பாராத விதமாக கடந்த 2018ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று பிரதமரானார். தன்னை தேர்தலில் இருந்து விலக்கி வைக்க விரும்பும் சக்திவாய்ந்த ராணுவத்தால் தான் குறிவைக்கப்படுவதாக இம்ரான் கான் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். இருப்பினும் ராணுவம் அதனை மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.