என் மீது துப்பாக்கிச்சூடு நடத்துவது எனக்கு ஒரு நாள் முன்பே தெரியும் என்று பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்தார்.


பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை சுட்டுக் கொல்ல நேற்று முயற்சி நடைபெற்றது.
நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் தோல்வி அடைந்ததன் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் பிரதமர் பதவியை இழந்த இம்ரான் கான் நாட்டில் முன்கூட்டியே தேர்தல் நடத்த வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகிறார்.


அதற்காக தலைநகர் இஸ்லாமாபாதை நோக்கி அவரது தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சி சார்பில் மாபெரும் போராட்ட யாத்திரை நடைபெற்று வருகிறது.


இந்நிலையில், பஞ்சாப் மாநிலம், வாசிராபாத்தில் அல்லாவாலா செளக் பகுதி வழியாக அவரது வாகனம் சென்று கொண்டிருந்தபோது, அந்த வாகனத்தை நோக்கி இளைஞர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டார்.
 


இதில், இம்ரான் கானின் காலில் குண்டு பாய்ந்தது. உயிருக்கு ஆபத்து ஏற்படும் அளவுக்கு காயம் இல்லை என்பது பின்னர் தெரியவந்தது. அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


அவரது வலது காலில் 4 புல்லட்டுகள் பாய்ந்தது. அவர் நாட்டு மக்களுக்கு மருத்துவமனையில் நிகழ்த்திய உரை:
என்னை துப்பாக்கியால் சுடுவதற்கு ஒரு நாள் முன்பே என் மீது தாக்குதல் நடக்கும் என்று எனக்கு தெரியும். வாஸிராபாத் அல்லது குஜராத் ஆகிய இடங்களில் தாக்குதல் நடக்கும் என்று எனக்கு தெரியவந்தது. நான் ஒரு சாதாரண மனிதன். எனது கட்சி ராணுவத்தின் கீழ் உருவாக்கப்படவில்லை. கட்சியை கட்டி எழுப்ப நான் 22 ஆண்டுகள் போராடியிருக்கிறேன். 4 பேர் என்னை கொல்ல சதித்திட்டம் தீட்டினர். எனக்கு எதாவது நடந்தால் அந்த வீடியோ வெளியிடப்படும். அமைச்சர் ராணா சனாவுல்லா, பிரதமர் ஷெபாஸ் ஷரீப், மேஜர் ஜெனரல் ஃபைசல் ஆகியோரும் அந்தப் பட்டியலில் உள்ளனர் என்று இம்ரான் கான் தெரிவித்தார்.






லாகூரில் உள்ள செளகத் கானும் மருத்துவமனையில் இம்ரான் கான் மாற்றப்பட்டார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது அவர் நலமாக உள்ளார் என்று அவரது கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது.
 முன்னதாக, இம்ரான் கான் மக்களை தவறாக வழிநடத்தியதாகவும் அதனால் தான், தான் அவரைக் கொலை செய்ய முயற்சித்ததாகவும் துப்பாக்கிச்சூடு நிகழ்த்திய இளைஞர் தெரிவித்துள்ளார்.


"அவர் மக்களை தவறாக வழிநடத்துவதால் நான் இதைச் செய்தேன். என்னால் தாங்க முடியவில்லை. அவர் பேரணியைத் தொடங்கிய அன்றே இதைச் செய்ய முடிவு செய்தேன்" என கைது செய்யப்பட்ட நவீத் காவல் துறையினரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.


Pugaar Petti: ABP NADU-இன் புகார் பெட்டி: நீங்களும் ரிப்போர்ட்டர் ஆகலாம்; இருக்கும் இடத்தில் சமுதாய நலப்பணி!


பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூடு உலக அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தி கடும் கண்டனங்களைப் பெற்று வருகிறது.


பாகிஸ்தானில் ஆளும் கட்சியான முஸ்லீம் லீக் நவாஸ் , அந்நாட்டின் தற்போதைய பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃபுக்கு எதிராக பிரமாண்ட பேரணியை, பிடிஐ கட்சித் தலைவரும் முன்னாள் பிரதமருமான இம்ரான் கான் நடத்திய நிலையில், அவர் மீது திடீரென துப்பாக்கிச்சூடு நிகழ்த்தப்பட்டது.