Pakistan Economic Crisis : பாகிஸ்தானில் நிலவும் நிதி நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இதைத்தொடர்ந்து கடந்தாண்டு ஏற்பட்ட வெள்ள பெருக்கும் பெரும் பாதிப்பை உண்டாக்கியது. இது பண வீக்கத்திற்கு காரணமாக அமைந்தது. விலைவாசி உயர்வு, பணவீக்கம் ஆகியவற்றால் திணறி வரும் பாகிஸ்தான், வரும் மாதத்தில் மேலும் கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்திக்கும் எனவும் பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பாகிஸ்தான் பெரும்பாலான பொருட்களை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து வரும் நிலையில், அந்நாட்டின் அன்னிய செலவாணியை பாதுகாக்க இறக்குமதி செய்யும் பொருட்கள் குறைந்துள்ளது. இதனால் உணவு தட்டுப்பாடு ஏற்படுவதோடு, வேலைவாய்ப்புகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் பாகிஸ்தான் நாட்டின் பணவீக்கம் மார்ச் 22 உடன் முடிந்த வாரத்தில் 47 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. மார்ச் 17 ஆன்று முடிவடைந்த வாரத்தில் நாட்டின் அந்நிய செலவானி கையிருப்பு 10.14 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளதாக தெரிகிறது.
விலை உயர்வு
மேலும், அத்தியாவசிய பொருட்களின் விலை எட்டாகனியாக மாறிவிட்டது. வெங்காயத்தின் விலை மட்டும் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 228.28 சதவீதம் அதிகரித்துள்ளது. இதோபோல் கோதுமை மாவின் விலை 120.66 சதவீதம் அதிகரித்துள்ளது, சிகரெட்டின் விலை 165.88 சதவீதம் அதிகரித்துள்ளது. லிப்டன் தேயிலையின் விலை 94.60 சதவீதம் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
2023ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் ஏரிவாயுவின் விலை 108.38 சதவீதம் அதிகரித்துள்ளது. டீசல் விலை 102.84 சதவீதமும் , பெட்ரோல் விலை 81.17 சதவீதமும் உயர்ந்துள்ளது. இதனை தொடர்ந்து, பழங்களின் விலையும் உயர்ந்துள்ளது. இதனால் நடுத்தர மற்றும் கீழ்தட்டில் இருக்கும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
மருந்து தட்டுப்பாடு
இதுமட்டுமின்றி, உயிர்காக்கும் மருந்துகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பொது மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் இறக்குமதி தடுப்பூசிகள், மயக்க மருந்துகள் உள்ளிட்டவைகளுக்கு கடும் பற்றாக்குறை நிலவுகிறது.
பாகிஸ்தானில் சில மருந்துகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இருந்தாலும், தடுப்பூசி, புற்றுநோய் தடுப்பு மருந்துகள் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இதனால் இறக்குமதி செய்யப்படும் மருந்து பொருட்களில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே எரிபொருள் விலை, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ள நிலையில், தற்போது மருந்து தட்டுப்பாடு ஏற்படுவதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, பாகிஸ்தானில் பணவீக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. வாராந்திர பணவீக்கம் 40 சதவீதத்தை தாண்டியுள்ளது. ஐந்த மாதங்களில் இரண்டாவது முறையாக பணவீக்கம் 40 சதவிதத்திற்கு மேல் உயர்ந்துள்ளதாக தெரிகிறது. இதனால்தான் பெட்ரோல் டீசல் விலை உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, மருந்து தட்டுப்பாடு போன்ற பிரச்சனைகள் வந்துள்ளதாக கூறப்படுகிறது.