பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப், நமது ஆபரேஷன் சிந்தூரின் போது அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்த ஒரு கருத்து மிகவும் நகைப்பை ஏற்படுத்தி, உலகம் முழுவதும் வைரலானது. அதேபோல், தற்போது அந்நாட்டில் ஏற்பட்ட வெள்ளத்தில் 20 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் கூறியுள்ள விஷயங்கள் மீண்டும் வைரலாகியுள்ளன. அப்படி என்ன கூறினார் என்று தானே கேட்கிறீர்கள். அதைத் தான் தற்போது பார்க்கப் போகிறோம்.
“மழையை ஆசிர்வாதமாக நினையுங்கள்; தண்ணீரை டப்புகளில் சேமியுங்கள்“
பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தில், சுமார் 20 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்படிப்பட்ட சூழலில், மழை வெள்ள அபாய நிலையை எப்படி கையாள வேண்டும் என அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப் ஒரு பேட்டியில் கூறியது, மிகவும் நகைப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளம் குறித்து பேசிய அவர், வெள்ள அபாயம் போன்ற சூழ்நிலைக்கு எதிராக போராடும் மக்கள், மழை வெள்ளத்தை வீட்டிற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என கூறினார். மேலும், தாழ்வான பகுதியில் வாழும் மக்கள், வெள்ளத்தை மழைநீர் வடிகால் கால்வாயில் விடுவதற்கு பதிலாக, கண்டெய்னர்கள், தொட்டிகளில் சேமிக்க வேண்டும் என அறிவுரை கூறினார்.
இதற்கெல்லாம் மேலாக, இந்த வெள்ளத்தை மக்கள் ஒரு ஆசிர்வாதமாக பார்த்து, நீரை சேமித்து வைக்க வேண்டும் என்று கூறியுள்ளது, மக்களிடையே அதிர்ச்சியையும், நகைப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும், 10 - 15 வருட பெரிய திட்டங்களை விட, சிறிய அணைகளை கட்ட வேண்டும் என கூறிய அவர், சிறிய அணைகள் கட்டும் வேலைகள் தான் உடனடியாக முடிவடையும் என்றும், நீரை கால்வாயில் விட்டுக் கொண்டிருக்கிறோம், அதை நாம் கட்டாயம் சேமிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அவரது இந்த பேச்சு தற்போது வைரலாகியுள்ளது.
பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் என்ன.?
இந்தியாவின் வடக்கு பகுதிகளில், அதாவது ஜம்மு காஷ்மீர், இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், டெல்லி போன்ற மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. ஜம்மு காஷ்மீர் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் மேகவெடிப்பு காரணமாக அதிகனமழை பெய்து, திடீர் வெள்ளம் ஏற்பட்டது.
இந்நிலையில், இதேபோன்று, பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்திலும், கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. அங்கு மட்டும் 20 லட்சத்திற்கம் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜூன் 26 தொடங்கி ஆகஸ்ட் 31-ம் தேதி வரை, மழை காரணமாக அங்கு 854 பேர் உயிரிழந்ததாகவும், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
செனாப் ஆற்றில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் ஓடுகிறது. இதனால், முல்தான் மாவட்டத்தை சென்றடையும் வெள்ளம், ராவி ஆற்று நீருடன் கலக்க வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இப்படிப்பட்ட ஒரு சூழலில், பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரின் கருத்து மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.