கடந்த ஞாயிற்றுக் கிழமை பிற்பகலில் கிழக்கு ஆப்கானிஸ்தானின் குனார் மாகாணத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தில், ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்து விழுந்தன. இதில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 1,400- கடந்துள்ளதாக தாலிபன் அரசு செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

1,411 பேர் பலி - 3,124 பேர் காயம் - அழிந்த 5,000 வீடுகள்

கிழக்கு ஆப்கானிஸ்தானில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகுதியில், 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு, குனார் மாகாணம் மிக மோசமாக பாதிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்து விழுந்த நிலையில், நுர்கல், சாவ்கே, சாபா தாரா, பெக் தாரா, வதாபூர் மற்றும் குனார் மாகாணம் அசதாபாத் பகுதிகளில்  ஏற்பட்ட சேதங்களில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது 1,411-ஆக உயர்ந்துள்ளது.

மேலும், 3,124 பேர் காயமடைந்துள்ளதாகவும், 5,412 வீடுகள் அழிக்கப்பட்டுவிட்டதாகவும், தாலிபன் அரசு செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை இரவு மலைகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது, அப்போது மக்கள் தூங்கிக் கொண்டிருந்தனர். இது, வீடுகளை அழித்து, கிராமங்களை தரைமட்டமாக்கியது, பலர் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். கடினமான நிலப்பரப்பு, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை தாமதப்படுத்துகிறது. எனினும், கடினமாக சூழல்களுக்கு மத்தியில் நிவாரணப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

“சர்வதேச சமூகம் செயல்பட வேண்டும்“

இது குறித்து பேசியுள்ள .நா-வின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் இந்திரிகா ரத்வத்தே, பல நெருக்கடிகள், பல அதிர்ச்சிகளை எதிர்கொள்ளும் ஆப்கானிஸ்தான் மக்களை நாங்கள் மறக்க முடியாது என்றும், மேலும், சமூகங்களின் மீள்தன்மை நிறைவுற்றது என்றும் கூறியுள்ளார்.

சர்வதேச சமூகம் செயல்பட வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். இவை வாழ்வா சாவா முடிவுகள், அதே நேரத்தில், மக்களை சென்றடைய நாம் காலத்திற்கு எதிராக போட்டியிடுகிறோம் என அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

2021-ம் ஆண்டு, தாலிபன்கள் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, இது மூன்றாவது பெரிய நிலநடுக்கமாகும். ஆப்கானிஸ்தான் ஏற்கனவே குறைக்கப்பட்ட உதவி, பலவீனமாக பொருளாதாரம் மற்றும் ஈரான், பாகிஸ்தானில் இருந்து மில்லியன் கணக்கான மக்கள் நாடு திரும்புதல் என, பல்வேறு பிரச்னைகளில் போராடி வருவது குறிப்பிடத்தக்கது.