Pak Vs Afg: பாகிஸ்தான் தாக்குதலில் ஆஃப்கானிஸ்தானின் மூன்று கிரிக்கெட் வீரர்கள் கொல்லப்பட்டதற்கு, கேப்டன் ரஷித் கான் வேதனை தெரிவித்துள்ளார்.
ஆஃப்., கிரிக்கெட் வீரர்கள் மரணம்:
பாகிஸ்தானின் ராணுவம் நடத்திய தாக்குதலில், ஆஃப்கானிஸ்தானைச் சேர்ந்த மூன்று உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அடுத்த மாதம் தொடங்கவிருந்த பாகிஸ்தான் மற்றும் இலங்கை உடனான முத்தரப்பு கிரிக்கெட் தொடரிலிருந்து விலகுவதாக, ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அதன் அறிக்கையின்படி, ”வீரர்கள் நட்பு ரீதியான போட்டியில் பங்கேற்பதற்காக உர்கன் பகுதியிலிருந்து பாகிஸ்தான் எல்லைக்கு அருகிலுள்ள கிழக்கு பக்திகா மாகாணத்தில் உள்ள ஷரானாவுக்கு பயணம் செய்திருந்தனர். அங்கிருந்து உர்குனுக்கு வீடு திரும்புவதற்காக வீரர்கள் ஓரிடத்தில் கூடியிருந்த நிலையில் பாகிஸ்தானால் நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலில் மூன்று வீரர்கள் கொல்லப்பட்டதாக” தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்கள் கபீர், சிப்கத்துல்லா மற்றும் ஹாரூன் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் மேலும் 5 பேரும் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ரஷித் கான் வேதனை
மூன்று கிரிக்கெட் வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி கேப்டன் ரஷித் கான் வேதனை தெரிவித்துள்ளார். இதுதொடர்பான சமூக வலைதள பதிவில், “சமீபத்தில் ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் பொதுமக்கள் உயிரிழந்தது எனக்கு மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மட்டுமின்றி உலக அரங்கில் தங்கள் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்று கனவு கண்ட இளம் கிரிக்கெட் வீரர்களும் பலியானது பெரும் சோகம். பொதுமக்களின் உள்கட்டமைப்பை குறிவைப்பது முற்றிலும் ஒழுக்கக்கேடானது மற்றும் காட்டுமிராண்டித்தனமானது. இந்த அநீதியான மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் மனித உரிமைகளை கடுமையாக மீறுவதாகும், மேலும் அவை கவனிக்கப்படாமல் போகக்கூடாது. இழந்த விலைமதிப்பற்ற அப்பாவி ஆன்மாக்களின் வெளிச்சத்தில், பாகிஸ்தானுக்கு எதிரான வரவிருக்கும் போட்டிகளில் இருந்து விலகுவதற்கான ACBயின் முடிவை நான் வரவேற்கிறேன். இந்த கடினமான நேரத்தில் நான் நமது மக்களுடன் நிற்கிறேன், நமது தேசிய கண்ணியம் மற்ற அனைத்தையும் விட முன்னதாக இருக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
அமைதி ஒப்பந்தத்தை மீறி தாக்குதல்:
பல நாட்களாக நீடித்த தீவிர எல்லை தாண்டிய மோதல்களைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே 48 மணி நேர போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்ட நிலையில், இந்த கொடிய தாக்குதல்கள் நடந்துள்ளன. தோஹா பேச்சுவார்த்தைகள் முடியும் வரை ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான தற்காலிக போர் நிறுத்தம் நீட்டிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று அமைதிக்கான பேச்சுவார்த்தையும் நடைபெற இருந்தது. இந்நிலையில் தான் பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி 3 இடங்களில் வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.