IND PAK Saudi: சவுதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்தை பரிசீலித்து வருவதாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் - சவுதி அரேபியா புதிய ஒப்பந்தம்:
சவுதி அரேபியா உடன் பாகிஸ்தான் அரசாங்கம் பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது. அந்நாட்டின் பிரதமர் ஷபாஸ் ஷெரிஃப் ரியாத்திற்கு மேற்கொண்ட போது இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, பாகிஸ்தான் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் ஏதேனும் ஒன்றின் மீது எந்தவொரு ஆக்கிரமிப்பு மேற்கொள்ளப்பட்டாலும், அது இரண்டு நாடுகளுக்கும் எதிரான ஆக்கிரமிப்பாகவே கருதப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஏதேனும் ஒரு நாடு பாகிஸ்தானை தாக்கினால் அது சவுதி அரேபியாவிற்கு எதிரான தாக்குதலாக கருதப்படும், பாகிஸ்தானுக்கு ஆதரவாக நாங்களும் போரில் களம் காண்போம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
80 ஆண்டுகால உறவிற்கான ஒப்பந்தம்
பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம் சவுதி அரேபியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ஒப்பதம், கிட்டத்தட்ட 80 ஆண்டுகளாக நீடிக்கும் வரலாற்று கூட்டாண்மையை அடிப்படையாகக் கொண்டது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் சகோதரத்துவம் மற்றும் இஸ்லாமிய ஒற்றுமையின் பிணைப்புகள், அத்துடன் பகிரப்பட்ட மூலோபாய நலன்கள் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான நெருக்கமான பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது என்று இருநாட்டு தலைவர்களும் ஒப்புதல் வழங்கிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேட்டோவிற்கு போட்டி?
ஏற்கனவே அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் அடங்கிய நேட்டோ எனும் பாதுகாப்பிற்கான ஒரு அமைப்பு உள்ளது. இதில் உறுப்பினராக உள்ள ஏதேனும் ஒரு நாட்டின் மீது யாரேனும் தாக்குதல் நடத்தினாலும், அது ஒட்டுமொத்த நேட்டோ உறுப்பு நாடுகள் மீதான தாக்குதலாகவே கருதப்படும். அதற்கான பதிலடியும் கொடுக்கப்படும். அந்த வகையில், பாகிஸ்தான் மற்றும் சவுதி அரேபியா சேர்ந்து NATO அமைப்பு போன்ற பாதுகாப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்தி இருப்பது, சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.
இந்தியா சொல்வது என்ன?
இந்நிலையில், மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சவுதி அரேபியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானதாக செய்திகள் வந்துள்ளன. இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால ஏற்பாட்டை முறைப்படுத்தும் இந்த ஒப்பந்தம் பரிசீலனையில் இருந்தது என்பதை அரசாங்கம் அறிந்திருந்தது.
இந்த நடவடிக்கையின் தாக்கங்களை நமது தேசிய பாதுகாப்பு மற்றும் பிராந்திய மற்றும் உலகளாவிய ஸ்திரத்தன்மையை கருத்தில் கொண்டு ஆய்வு செய்வோம். இந்தியாவின் தேசிய நலன்களைப் பாதுகாப்பதற்கும், அனைத்து களங்களிலும் விரிவான தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது" என்று விளக்கமளித்துள்ளது.
இந்தியா உடன் உரசலா?
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான எல்லைப் பிரச்னை என்பது பல தசாப்தங்களாக நீடித்து வருகிறது. கடந்த மே மாதம் அரங்கேறிய பஹல்காம் தாக்குதலுக்கு கூட, ஆப்ரேஷன் சிந்தூர் என்ற ராணுவ நடவடிக்கை மூலம் பாகிஸ்தானுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்தது. இந்நிலையில் தான், இந்தியாவின் நட்பு நாடுகளில் ஒன்றாக கருதப்படும் சவுதி அரேபியா, பாகிஸ்தானுடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதனால் இந்தியா உடனான உறவில் ஏதேனும் விரிசல் ஏற்பட்டுள்ளதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இருப்பினும், அந்நாட்டு மூத்த அதிகாரி ஒருவர் பேசுகையில், “இந்தியா உடனான எங்களது உறவு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது வலுவாக உள்ளது. அதனை மேலும் வலுப்படுத்த முயற்சிப்போம்” என விளக்கமளித்துள்ளார். அதேநேரம், இந்த ஒப்பத்தின் விளைவு என்ன? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். மேலும் சில இஸ்லாமிய நாடுகளும் பாகிஸ்தான் மற்றும் சவுதி அரேபியாவின் ஒப்பந்தத்தில் இணையுமா? என்ற எதிர்பார்ப்புகளும் எழுந்துள்ளன.