இன்று தனது பிறந்த நாளை கொண்டாடும் பிரதமர் மோடிக்கு, உலகெங்கிலும் இருந்து தலைவர்களின் வாழ்த்துகள் குவிந்துள்ளன. அதில், ரஷ்ய அதிபர் புதினின் வாழ்த்தும் ஒன்று. இதற்காக புதினுக்கு நன்றி தெரிவித்து தனது எக்ஸ் தளத்தில் பிதிவிட்டுள்ள மோடி, அவருக்கு ஒரு வாக்குறுதியையும் அளித்துள்ளார். அது என்ன என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.
பிதமர் மோடியை வாழ்த்திய உலகத் தலைவர்கள்
இன்று பிரதமர் மோடி தனது 75-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு, மோடிக்கு பல்வேறு உலகத் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளனர்.
ரஷ்ய அதிபர் புதின், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இங்கிலாந்து முன்னாள் பிரதமர் ரிஷி சுனக், ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பனீஸ், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, ஐக்கிய அரபு அமீரக அதிபர் முகம்மது பின் ஜெயத், நியூசிலாந்து பிரதமர் கிரிஸ்டோபர் லுக்சன் உள்ளிட்டோர் பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துச் செய்திகளை அவர்களது எக்ஸ் தள பக்கங்களில் பதிவிட்டனர்.
இதையடுத்து, அவர்கள் ஒவ்வொருவருக்கும் பிரதமர் மோடி பதிலளித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டு, நன்றி தெரிவித்துள்ளார்.
புதினுக்கு நன்றி தெரிவித்து, வாக்கும் அளித்த பிரதமர் மோடி
இந்நிலையில், ரஷ்ய அதிபர் புதினுக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி போட்ட பதிவில், தனது பிறந்த நாளுக்கு தொலைபேசியில் அழைத்து அன்பான வாழ்த்து கூறிய நண்பர் அதிபர் புதினுக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.
மேலும், “நமது சிறப்பு வாய்ந்த மூலோபாய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த நாங்கள் உறுதி பூண்டுள்ளோம்“ எனவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
அதோடு, உக்ரைன் மோதலுக்கு அமைதியான தீர்வு காண இந்தியா அனைத்து சாத்தியமான பங்களிப்பையும் அளிக்க தயாராக உள்ளதாகவும் பிரதமர் மோடி வாக்குறுதி அளித்துள்ளார்.
ரஷ்யா-உக்ரைன் இடையேயான போர் முடிவுக்கு வருவதுபோல் தெரியவில்லை. ஏனென்றால், அந்த போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்துள்ளன. இந்நிலையில், புதின் போரை நிறுத்த விரும்பவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது. அதற்கு ஏற்றாற்போல், உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இப்படிப்பட்ட சூழலில், இந்தியாவிற்கு நெருங்கிய நட்பு நாடாக ரஷ்யா இருக்கும் நிலையில், பிரதமர் மோடி இவ்வாறு பதிவிட்டுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.