லண்டன் இம்பீரியல் கல்லூரியின் லைஃப் சயின்ஸ் துறையைச் சேர்ந்தவர்களும், சில சூழலியலாளர்களும் சேர்ந்து  இந்த கழுகு ஆந்தையை கண்டுபிடித்துள்ளனர். கானாவில் உள்ள உள்ளூர் வேட்டைக்காரரிடமிருந்து லண்டனில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் பறவை சேகரிப்பின் கண்காணிப்பாளரும் பிரிட்டிஷ் பறவையியல் கிளப்பின் நிறுவனருமான ரிச்சர்ட் பட்லர் ஷார்ப் என்பவரால் பெறப்பட்ட ஒரு மாதிரியிலிருந்து இந்த பறவை முதன்முதலில் விவரிக்கப்பட்டது. 1870களில் இருந்து கானாவில் எங்கும் இது காணப்படவில்லை, மற்ற இடங்களிலும் யார் கண்களிலும் படவில்லை. லைபீரியாவிலிருந்து அங்கோலா வரை மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்காவின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஷெல்லியின் கழுகு ஆந்தையின் சத்தத்தை கேட்டதாகவோ அல்லது மிக சிறிய நொடிகள் பார்த்ததாகவோ நம்புவதாக சமீபத்திய இருபது முப்பது வருடங்களில் அவ்வப்போது அறிக்கைகள் வந்துள்ளன. இதில் பெரும்பாலானவை உறுதிப்படுத்தப்படாதவை.



16 அக்டோபர் 2021 அன்று டாக்டர் டோபியாஸ் மற்றும் டாக்டர் வில்லியம்ஸ் ஆகியோர் கானாவில் உள்ள அடேவா காட்டிற்குச் சென்று ஒரு பெரிய பறவையை அதன் பகல்நேர கூட்டத்திலிருந்து கலைத்தபோதுதான் இது நிகழ்ந்தது. "அது அளவில் மிகவும் பெரியது, முதலில் கழுகு என்று நினைத்தோம்" என்று டாக்டர் டோபியாஸ் கூறினார். "அதிர்ஷ்டவசமாக அது ஒரு தாழ்வான கிளையில் அமர்ந்தது, நாங்கள் எங்கள் தொலைநோக்கியை தூக்கி பார்த்தபோது அதிசயித்துப்போனோம், ஆப்பிரிக்காவின் மழைக்காடுகளில் இவ்வளவு பெரிய ஆந்தை வேறேதும் இல்லை." என்றார். பறவை 10-15 வினாடிகள் மட்டுமே அமர்ந்திருப்பதை அவர்கள் கண்டார்கள், ஆனால் அந்த நேரத்திற்குள் அதன் தனித்துவமான கருப்பு கண்கள், மஞ்சள் விழி மற்றும் அதன் அளவு ஆகியவற்றின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் புகைப்படங்களை எடுக்க முடிந்தது, இது மற்ற அனைத்து ஆப்பிரிக்க வன ஆந்தைகளையும் அருகே சேர்க்கவில்லை.



இவ்வளவு பெரிய அளவிலான ஒரு வேட்டையாடும் பறவை ஆபிரிக்காவின் ஒரு பெரிய நிலப்பரப்பில் கண்ணுக்கு தெரியாததாக மாறியது எப்படி என்பதை ஆராய்ச்சியாளர்கள் ஆர்வமுடன் ஆராய்ந்து வருகின்றனர். கானாவின் சுற்றுச்சூழல் மற்றும் நிலையான வளர்ச்சி பல்கலைக்கழகத்தின் டாக்டர் நதானியேல் அன்னோர்பா கூறுகையில் "இது ஒரு முக்கியமான கண்டுபிடிப்பு. இந்த மர்மமான பறவையை நாங்கள் பல ஆண்டுகளாக மேற்கு தாழ்நிலங்களில் தேடிக்கொண்டிருக்கிறோம், எனவே கிழக்கு பிராந்தியத்தின் ரிட்ஜ்டாப் காடுகளில் அதை கண்டுபிடிப்பது ஒரு பெரிய ஆச்சரியம்." 


இந்த கழுகு ஆந்தை அதிகாரப்பூர்வமாக அழிந்துபோகக்கூடியதாக வகைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் கானாவில் தொடர்ந்து உயிர்வழ்கின்றன என்னும் செய்தி இந்த இனங்கள் மீதான புதிய நம்பிக்கையை அளிக்கிறது. டாக்டர் வில்லியம்ஸ் கூறுகையில்: "இந்த கண்டுபிடிப்பு அடேவா காடு மற்றும் உள்ளூர் பல்லுயிரியலைப் பாதுகாப்பதற்கான அதன் முக்கியத்துவத்தை ஈர்க்கும் என்று நாங்கள் நம்புகிறோம். அத்தகைய அரிய மற்றும் அற்புதமான ஆந்தையின் கண்டுபிடிப்பு கானாவில் உயிர்ப்போடு இருக்கும் கடைசி காடுகளில் ஒன்றைக் காப்பாற்றுவதற்கான இந்த முயற்சிகளை அதிகரிக்கும் என்று நம்புகிறோம்." என்றார்.