சினிமாத்துறைக்கு அளிக்கப்படும் உயரிய விருது ஆஸ்கர் என்று அழைக்கப்படும் அகாடமி விருதுகள். அந்த வகையில், 95ஆவது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை நடைபெறுகிறது.
யார் யார் விருதுகள் வெல்வார்கள் என்ற உச்சக்கட்ட எதிர்பார்ப்பு உலக சினிமா ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. இந்தியாவிலிருந்து நாட்டு நாட்டு பாடல் (RRR), ஆவண குறும்படம் - த எலெஃபேண்ட் விஸ்பரர்ஸ் (The Elephant Whisperers), ஆவணப் படமான ஆல் தட் ப்ரீத்ஸ் (All That Breathes) என மூன்று பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன.
உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் இந்தியர்கள்:
இதனால் இந்திய ரசிகர்கள் கூடுதல் எதிர்பார்ப்புடனும் உற்சாகத்துடனும் காத்து கொண்டிருக்கின்றனர். குறிப்பாக, ஒரிஜினல் பாடல் பிரிவில் பரிந்துரைக்கப்பட்ட ஆர்.ஆர்.ஆர். படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைக்க வேண்டும் என ரசிகர்கள் விருப்பம் தெரிவித்த வருகின்றனர்.
ஆனால், இந்த பிரிவில் அப்ளாஸ் (டெல் இட் லைக் எ வுமன்), ஹோல்ட் மை ஹேண்ட் (டாப் கன் மேவரிக்), லிஃப்ட் மீ அப் (பிளாக் பாதர் வகண்டா ஃபாரெவர்), மற்றும் திஸ் இஸ் எ லைஃப் (எவ்ரிதிங் எவ்ரிதிங் ஆல் அட் அட் ஒன்ஸ்) பரிந்துரைக்கப்பட்டதால் போட்டி கடினமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், நாட்டு நாட்டு பாட்டின் நடன அசைவுகள் உலகம் முழுவதும் சினிமா ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியதோடு மட்டுமல்லாமல் ஆட்டம் போடவும் வைத்தது அதற்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.
'நாட்டு நாட்டு' பாடலுக்கு குத்தாட்டம் போட உள்ள அமெரிக்க நடிகை:
இந்நிலையில், நாளை நடைபெற உள்ள ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில் நாட்டு நாட்டு பாடலுக்கு அமெரிக்கா நடிகரும் நடனக் கலைஞருமான லாரன் கோட்லீப் நடனமாட உள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "நாட்டு நாட்டு பாடலால் ஆஸ்கார் விருதை வெல்ல முடியும். அப்படி, நடந்தால் நான் மேடைக்கு பின்னால் பைத்தியம் போல் நடனமாடுவேன்" என்றார்.
விழாவில் நடனமாடுவது குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவு வெளியிட்டுள்ள அவர், "நல்ல செய்தி!!! நான் OSCARS இல் நாட்டு நாட்டு பாட்டுக்கு நடமாடுகிறேன்!!!!!! உலகின் மிகவும் மதிப்புமிக்க மேடையில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில் நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். எனக்கு வாழ்த்து தெரிவியுங்கள்" என பதிவிட்டுள்ளார்.
ஜலக் திக்லா ஜா நிகழ்ச்சியின் ஆறாவது சீசனில் இரண்டாம் இடத்தைப் பிடித்த லாரன், ABCD: Any Body Can Dance (2013) போன்ற படங்களில் நடித்துள்ளார்.
முன்னதாக அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த கோல்டன் குளோப் விருது வழங்கும் விழாவில் சிறந்த பாடலுக்கான விருதை நாட்டு நாட்டு பாடலுக்காக இயக்குநர் ராஜமௌலி, நடிகர்கள் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர்., இசையமைப்பாளர் கீரவாணி ஆகியோர் கூட்டாக பெற்றுக்கொண்டனர்.