பதவி பசி கொண்ட இருவரை காப்பாற்றுவதை விட, ஜனநாயகத்திற்காக போராடும் நாட்டு மக்களைக் காப்பாற்றுங்கள் என ராணுவத்தினருக்கு, இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கோரிக்கை விடுத்துள்ளார்.
போராடும் மக்களை அடக்குமாறும் மக்கள் புரட்சியை ஒடுக்குமாறும் அடுத்தடுத்து உத்தரவுகளை, தற்காலிக அதிபர் எனக் கூறிக் கொள்ளும் ரணில் விக்கிரமசிங்க பிறப்பித்துள்ளதாக பிரதமர் அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச்சூழலில்தான், இதுவரை அமைதி காத்து வந்த, எதிர்க்கட்சித் தலைவரும் சமகி ஜன பாலவேகய கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச களமிறங்கி உள்ளார்.
இது தற்போது பதவி வெறி பிடித்த இருவரை காப்பாற்றுவதை விட, இலங்கைக்காக போராடும் இரண்டு கோடி மக்களைக் காப்பாற்றுங்கள் என்ற வாசமாக இலங்கையில் தீயாய் பரவ ஆரம்பித்துள்ளது.
இதற்கிடையே, தற்காலிக அதிபராக இருக்கும் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகருக்கு அவசர உத்தரவொன்றை பிறப்பித்துள்ளார். நாடாளுமன்ற கட்சித்தலைவர்கள் கூட்டத்தை கூட்டி, அனைவரும் ஏற்கத்தக்க வகையில், பிரதமர் ஒருவரை தேர்வு செய்யுங்கள் என உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையே, ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் பதவியை விட்டு உடனடியாக விலக வேண்டும் என சபாநாயகர் தலைமையில் கூடிய அனைத்துக் கட்சித்தலைவர்களும் அறிவுறுத்தி உள்ளனர்.
அதேபோன்று, முப்படை தளபதி, காவல்துறை உயர் அதிகாரிகள், ராணுவ உயர் அதிகாரிகள் அடங்கிய குழுவொன்று அமைத்து, மக்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர உத்தரவிட்டுள்ளதாக இலங்கை தற்காலிக அதிபர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார். மறுபக்கத்தில் எதிர்க்கட்சித்தலைவர் மக்கள் போராட்டத்திற்கு ஆதரவு தாருங்கள், பதவி வெறியர்களுக்கு ஆதரவாக இருக்காதீர்கள் என கோரிக்கை விடுத்துள்ளார். இதனால், பாதுகாப்புப் படை உயர் அதிகாரிகள் குழப்பம் அடைந்துள்ளனர்.
இதற்கிடையே, முதல்முறையாக, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் சார்பில் இலங்கையின் அனைத்துத் தரப்பினருக்கும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, வன்முறைகளைக் கைவிட்டு, சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டும் வகையில், அமைதியான முறையில் அதிகாரப்பரிமாற்றத்திற்கு ஆதரவு அளிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
அதேபோன்று, முதன்முறையாக வெளிப்படையாக அமெரிக்கா சார்பில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதர் ஜூலி சாங், அனைத்துத் தரப்பினரும் அமைதியான முறையில் செயல்படுமாறும், நீண்டகால பொருளாதார, அரசியல் ஸ்திரத்தன்மைக்கு உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இலங்கையில் போராட்டங்கள் தொடர்கதையாக மாறி வரும் நிலையில், நாடாளுமன்றம் நாளை கூடுகிறது. இந்தக் கூட்டத்தில் நிச்சயம் காரசார விவாதங்கள் மட்டுமல்ல, அரசியல் நகர்வுகள் எப்படி இருக்கும் என்பது குறித்து தெளிவான நிலை கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. ஆனால், வீதிகளில் இறங்கிப் போராடும் மக்களைப் பொறுத்தமட்டில், கோத்தபய மற்றும் ரணீல் ஆகியோரின் ராஜினாமா மட்டுமே, தங்களது போராட்டத்தை மட்டுப்படுத்தும் எனத் தெள்ளத் தெளிவாகக் கூறுகின்றனர்.
எனவே, இலங்கையில் நிலவும் குழப்பத்திற்கு, தற்சமயத்திற்கு முற்றுப்புள்ளி இல்லை என்பதுதான் மட்டும் தெளிவாகிறது.