உலகின் பழமை வாய்ந்த உயிரியல் பூங்காக்களில் ஒன்றான பிரிஸ்டல் உயிரியல் பூங்கா, திறக்கப்பட்டு 186 ஆண்டுகளுக்கு பிறகு மூடப்பட்டுள்ளது. அது ஏன் தெரியுமா?






பிரிஸ்டல் மிருகக்காட்சிசாலையானது 1836 ஆம் ஆண்டு பொதுமக்களுக்கு திறக்கப்பட்டது. 12 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்புடன், இது ஒரு காலத்தில் 7,000க்கும் மேற்பட்ட விலங்குகள் மற்றும் 420 இனங்களுக்கு தாயகமாக இருந்தது. திறக்கப்பட்டதிலிருந்து, 90 மில்லியன் பார்வையாளர்கள் இந்த பூங்காவிற்கு சென்றுள்ளனர். 


இந்த பூங்காவில் கடைபிடிக்கப்பட்டு வந்த பாதுகாப்புத் திட்டங்கள் மூலம் 175 இனங்களை அழிவிலிருந்து காப்பாற்றும் முன்மாதிரியான பணிகளை செய்துள்ளது. ஆனால், கடந்த சில ஆண்டுகளில் கொரோனா தொற்றுநோய் காரணமாக விஷயங்கள் கடுமையாக மாறிவிட்டன. 


பொது முடக்கம் மற்றும் சமூக இடைவெளி கட்டுப்பாடுகள் காரணமாக பார்வையாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால், மிருகக்காட்சிசாலை பொருளாதார ரீதியாக சிரமப்பட்டது. பிரிஸ்டல் விலங்கியல் சங்கம் என்ற தொண்டு நிறுவனம்தான், பிரிஸ்டல் மிருகக்காட்சிசாலையை பராமரித்து வருகிறது. கடந்த ஆறு ஆண்டுகளில் நான்கு ஆண்டுகளில், உயிரியல் பூங்காவை நடத்த கூட முடியாமல் நிர்வாகம் சிரமத்தை எதிர்கொண்டது.


இங்கிலாந்தில் இரண்டாவது பொது முடக்கத்தின் போது மிக மோசமான கட்டத்தை எதிர்கொள்ள நேர்ந்தது. மிருகக்காட்சிசாலையின் வருவாய், பெரிய அளவில் குறைந்தது. இதன் விளைவாக மிருகக்காட்சிசாலை மூடுவது தொடர்பாக திட்டமிடப்பட்டது. மிருகக்காட்சிசாலை, அதன் நீண்ட மற்றும் புகழ்பெற்ற வரலாறும் முடிவுக்கு வருகிறது.


மிருகக்காட்சிசாலையின் மக்கள் தொடர்புத்துறை பிரிவு தலைவர் சைமன் காரெட் இதுகுறித்து கூறுகையில், “பிரிஸ்டல் பூங்கா, 186 ஆண்டுகளாக பிரிஸ்டல் வாழ்க்கையின் முக்கிய அங்கமாக உள்ளது. உலக அங்கீகாரம் பெற்றுள்ளது. ஆயிரக்கணக்கான குடும்பங்களின் பல ஆண்டுகளாக நினைவுகளைக் கொண்டிருக்கிறது. பலருக்கு, மிருகக்காட்சிசாலை அவர்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க பகுதியாகவே உள்ளது" என்றார்.


இதன் மூடுவிழாவை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. செப்டம்பர் இறுதிக்கு முன்பாக மிருகக்காட்சிசாலையில் பல நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வழக்கமான பார்வையாளர்களை கடைசியாக ஒன்றாகக் கூட்டிச் பார்ட்டி அளிப்பதே அவர்களின் குறிக்கோள். இதில், ஒரு நல்ல செய்தியும் இருக்கிறது.


பிரிஸ்டல் விலங்கியல் சங்கம் விற்பனையிலிருந்து கிடைக்கும் பணத்தை கொண்டு, தெற்கு க்ளௌசெஸ்டர்ஷயரில் அமைந்துள்ள வனவிலங்கு பூங்காவில் வனப்பகுதி சுற்றுலா தளத்தை உருவாக்க பயன்படுத்தப்பட உள்ளது. இந்த புதிய இடம் 2024க்குள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பல விலங்குகள், முக்கியமாக கொரில்லாக்கள் மற்றும் சிவப்பு பாண்டாக்கள், புதிய வனப்பகுதி சுற்றுலா தளம் தயாராகும் வரை பழைய மிருகக்காட்சிசாலையில் இருக்கும்.