பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வரும் நவம்பர் மாதம் 5ஆம் தேதி, அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்களே உள்ள நிலையில், அமெரிக்க அரசியல் வரலாற்றில் இதுவரை நடைபெற்றிராத அளவுக்கு திருப்பங்கள் அரங்கேறி வருகிறது.


அமெரிக்க அரசியலில் தொடர் திருப்பம்: தொடக்கத்தில் தற்போதைய அதிபர் ஜோ பைடனே, ஜனநாயக கட்சி சார்பில் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வயது முதிர்வு, நியாபக மறதி என பைடனுக்கு எதிராக அடுத்தடுத்து எழுந்த புகார்கள் ஜனநாயக கட்சியினர் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.


இதற்கிடையே, குடியரசு கட்சி சார்பில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட முன்னாள் அதிபர் டிரம்ப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவம் நிலைமையை தலைகீழாக திருப்பிப்போட்டது. டிரம்ப்க்கு ஆதரவாக சூழல் மாறியதால், அதிபர் போட்டியில் இருந்து பைடன் விலக வேண்டும் என ஜனநாயக கட்சியின் மூத்த தலைவர்கள் கோரிக்கை வைக்க தொடங்கினர். 


குறிப்பாக, பைடன், டிரம்ப் ஆகியோருக்கு இடையே நடந்த விவாதத்தில் பைடன் பதில் அளிக்க முடியாமல் தடுமாறியது பைடனை மேலும் நெருக்கடியில் தள்ளியது. இப்படிப்பட்ட சூழலில், போட்டியிலிருந்து விலகுவதாகவும் துணை அதிபர் கமலா ஹாரிஸை அதிபர் போட்டிக்கு முன்மொழிவதாகவும் அறிவித்தார்.


அடுத்த அதிபர் யார்? அதிபர் போட்டியில் இருந்து பைடன் விலகிய ஒரே நாளில், ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக முன்மொழிவதற்கான போதுமான ஆதரவை கமலா ஹாரிஸ் திரட்டிவிட்டார். குடியரசு கட்சியின் அதிகாரப்பூர்வ அதிபர் வேட்பாளராக டிரம்ப் அறிவிக்கப்பட்டுவிட்டாலும், ஜனநாயக கட்சியின் அதிகாரப்பூர்வ அதிபர் வேட்பாளர் அடுத்த மாதம்தான் அறிவிக்கப்பட உள்ளார்.


இந்த நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பாக கணிப்புகளை வெளியிடும் பிரபல தேர்தல் கணிப்பாளர் ஆலன் லிச்ட்மேன், இந்த முறை யார் வெற்றி பெறுவார் என்பது குறித்து தனது முதல் கட்ட கணிப்பை வெளியிட்டுள்ளார்.


அமெரிக்க அதிபர் தேர்தல்களின் நாஸ்ட்ரடாமஸ் என அழைக்கப்படும் ஆலன் லிச்ட்மேன், இந்த முறை கமலா ஹாரிஸே வெற்றிபெறுவார் என கணித்துள்ளார். கடந்த 1984ஆம் ஆண்டு முதல் நடந்த 10 தேர்தல்களில் 9 தேர்தல்களை ஆலன் லிச்ட்மேன் கணித்துள்ளார்.


கடந்த 50 ஆண்டுகளாக அமெரிக்க பல்கலைக்கழகத்தில் வரலாற்று பேராசிரியராக பணிபுரிந்து வரும் ஆலன் லிச்ட்மேன், 13 அடிப்படை விவகாரங்களை முன்வைத்து தனது கணிப்புகளை தீர்மானிக்கிறார். அந்த 13 விவகாரங்களில் 6 அல்லது அதற்கு மேற்பட்டவை ஆளுங்கட்சிக்கு எதிராக இருந்தால், தேர்தலில் ஆளுங்கட்சி தோற்கும் என கணிக்கப்படுகிறது.


லிச்ட்மேன் பார்முலாப்படி தற்போதைக்கு 6 விவகாரங்களில் ஜனநாயக கட்சி முன்னிலை வகிக்கின்றது. மூன்றில் குடியரசு கட்சி முன்னிலை வகிக்கிறது. எனவே, தற்போதைக்கு கமலா ஹாரிஸே முன்னிலையில் உள்ளார்.


ஜனநாயக கட்சி அதிகாரப்பூர்வ அதிபர் வேட்பாளரை அறிவித்த பின்னர்தான், லிச்ட்மேன், தனது இறுதி கணிப்பை வெளியிடுவார். கடந்த 2016 மற்றும் 2020ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் லிச்ட்மேன் சரியான கணிப்பை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.