வடகொரியா இன்று பல்வேறு பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி சோதனையில் ஈடுபட்டுள்ளது.


பாலிஸ்டிக் ஏவுகணை என்பது ராக்கெட்டை கொண்டு ஏவப்படும் ஏவுகணையாகும். ஆனால், ஏவப்படும் தொடக்க கட்டத்தில் மட்டுமே ராக்கெட்டின் உதவியோடு ஏவுகணை பயணம் செய்யும். பின்னர், எந்த ஒரு உதவியும் இன்றி இலக்கை சென்றடையும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.


இன்று நடைபெற்ற சோதனை கட்டத்தில் கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணை தோல்வி அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கு மத்தியில், பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மத்திய மற்றும் வடக்கு ஜப்பானில் வாழும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


ஜப்பானுக்கு மேலே ஏவுகணை செல்வதாக எச்சரிக்கை விடுத்தபோதிலும் அதை ஜப்பான் அரசு மறுத்துள்ளது. கண்டம் விட்டு கண்டம் தாக்கும் இந்த ஏவுகணைகளே வடகொரியாவின் நீண்ட இலக்கை தாக்கி அழிக்கும் ஆயுதங்கள் என தென்கொரிய மற்றும் ஜப்பான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 


 






கண்டத்தின் மறுபக்கத்தில் அமைந்துள்ள பகுதிக்கு அணுகுண்டுகளை ஏந்தி செல்லும் வகையில் இந்த ஏவுகணை வடிவமைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இன்று சோதனை செய்யப்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை பறக்கும் போதே தோல்வி அடைந்ததாக தென்கொரிய அதிகாரிகள் நம்புகின்றனர். ஆனால், இதுகுறித்து அவர்கள் விளக்கவில்லை.


ஏவுகணை தோல்வி அடைந்திருப்பதாக வெளியான செய்தியை தென்கொரிய மற்றும் ஜப்பான் பாதுகாப்பு அமைச்சகங்கள் உறுதிப்படுத்தவில்லை. இதுகுறித்து ஜப்பான் பாதுகாப்புதுறை அமைச்சர் யசுகாசு ஹமாடா கூறுகையில், "ஜப்பான் கடலுக்கு மேலே ஏவுகணை பறந்தபோது, அதன் தொடர்பை அரசு இழந்தது. எனவே, ஜப்பான் கடலுக்கு மேலே ஏவுகணை சென்றதாக வெளியான தகவலை மறுத்துள்ளோம்" என்றார்.


இது தொடர்பாக ஓய்வுபெற்ற வைஸ் அட்மிரல் மற்றும் முன்னாள் ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படையின் தளபதி யோஜி கோடா கூறுகையில், "ஏவுகணையை பின் தொடர்ந்த ரேடார் இணைப்பை இழந்தோம். சோதனை தோல்வி அடைந்திருப்பதை இது உணர்த்துகிறது. ஏவுகணை பறந்து செல்லும்போது ஒரு கட்டத்தில் ஏவுகணையில் கோளாறு ஏற்பட்டிருப்பதை இது உணர்த்துகிறது. பின்னர், அது வெடித்து சிதறி இருக்கலாம்.


கொரிய தீபகற்பம் மற்றும் ஜப்பானுக்கு இடைப்பட்ட பகுதியில் ஏவுகணை விழுந்திருந்தாலும், அது வேகமாக பயணித்த காரணத்தால் அதன் வெடித்து சிதறிய பாகங்கள் ஜப்பானை கடந்து சென்றிருக்கலாம்" என்றார்.


இந்தாண்டு, வடகொரியாவின் பல ஏவுகணை சோதனைகள் தோல்வி அடைந்திருப்பதாக தென்கொரிய மற்றும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வடகொரியாவின் இந்த சோதனைக்கு அமெரிக்க கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ப்ரைஸ் கூறுகையில், "இந்த ஏவுகணை சோதனை ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை தெளிவாக மீறியுள்ளது" என்றார்.