வட கொரிய தலைநகர் பியோங்யாங்கில் பெயர் தெரியாத சுவாச நோய் அதிகரித்து வருவதால் அங்கு ஐந்து நாட்களுக்கு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை, தென் கொரியா செய்தி நிறுவனம் உறுதி செய்துள்ளது.


இதுகுறித்து வட கொரிய அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதாக தென் கொரியா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில், கொரோனா பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஆனால், தலைநகரில் வசிப்பவர்கள் ஞாயிற்றுக்கிழமை இறுதி வரை தங்கள் வீடுகளிலேயே இருக்கும்படி வலியுறுத்தியுள்ளது. 


உடல் வெப்பநிலையை அடிக்கடி சோதனை செய்து சமர்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


முன்னதாக, நேற்று, பியோங்யாங் நகர மக்கள் கடுமையான கட்டுபாடுகள் விதிக்கப்படும் என்பதை முன்கூட்டியே கணித்து தேவையான பொருள்களை தங்களின் வீடுகளில் சேமித்த வைத்தனர்.


நாட்டின் பிற பகுதிகளில், கட்டுப்பாடுகள் ஏதேனும் அமல்படுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து தெரியவில்லை. கடந்தாண்டுதான், கொரோனா பரவல் ஏற்பட்டிருப்பதாக வட கொரியா முதல்முதலாக அறிவித்தது. ஆனால், ஆகஸ்ட் மாதமே, கொரோனாவை வெற்றி கொண்டதாக அந்நாடு அறிவித்தது.


வட கொரியாவில் எத்தனை பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை அந்நாடு உறுதி செய்யவே இல்லை. இதற்கு காரணம், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை சோதனை செய்வதற்கான வசதி அங்கு இல்லை எனக் கூறப்படுகிறது.


இருப்பினும், தினமும் எத்தனை பேருக்கு காய்ச்சல் ஏற்பட்டிருக்கிறது என்பது குறித்து அந்நாடு தெரிவித்து தகவல் வெளியிட்டு வந்தது. மொத்தம் 2 கோடியே 50 லட்சம் மக்கள் தொகை கொண்ட  வட கொரியாவில் 47 லட்சம் பேருக்கு இம்மாதிரியான காய்ச்சல் ஏற்பட்டதாக அந்நாடு தெரிவித்திருந்தது.


கடந்த ஜூலை 29ஆம் தேதி முதல், எத்தனை பேருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது என்ற தகவலும் வெளியிடப்படவில்லை. தற்போது பரவி வரும் சுவாச நோய் உள்பட காய்ச்சலை கட்டுப்படுத்த அந்நாட்டில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக வட கொரிய அரசின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.


ஆனால், ஊரடங்கு குறித்து எந்த தகவலையும் அரசு செய்தி நிறுவனம் வெளியிடவில்லை. கடந்த 2 ஆண்டுகளாக உலக நாடுகளை நிலைகுலைய வைத்த கொரோனா மீண்டும் அச்சத்தை ஏற்படுத்த தொடங்கியுள்ளது. சீனாவில் பரவ தொடங்கிய கொரோனாவால் உலகம் முழுவதும் கோடி கணக்கில் உயிரிழப்புகள் ஏற்பட்டன.


அறிவியல் உலகின் தொடர் முயற்சியால் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு அது கட்டுப்பாட்டில் வரவழைக்கப்பட்டது. கொரோனா எண்ணிக்கை குறைந்ததை தொடர்ந்து, பல்வேறு நாடுகளில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. 


ஆனால், சீனா, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சீனாவில் மருத்துவமனைகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் நிரம்பி வழிவதாக தகவல் வெளியான வண்ணம் உள்ளது.