வடகொரியாவில் கையில் பைபிள் உடன் சிக்கிய 2 வயது குழந்தை உட்பட, ஒரு குடும்பமே சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மர்மமாக தொடரும் வடகொரியா:


பல்வேறு நாகரீக வளர்ச்சிக்கு மத்தியிலும் அதிபர் கிம் ஜாங் உன் ஆட்சியின் கீழ் வடகொரியா இன்றளவும் சர்வாதிகார நாடாகாத்தான் உள்ளது. பொதுமக்களுக்கு பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது, மீறினால் தயவு தாட்சனையின்றி மரண தண்டனையும் விதிக்கப்படுகிறது. கொரோனா பாதிப்பால் உலகமே ஒருவருக்கு ஒருவர் கைகொடுத்து உதவி வந்த நிலையில் கூட, பிற நாடுகளின் உதவியே எங்களுக்கு வேண்டாம் என பிடிவாதமாகத்தான் இருந்தது. 


தொடரும் மதப்பிரச்னை:


இதனிடையே, வட கொரியாவில் பல்வேறு மதத்தினர் இருந்தாலும் அந்நாட்டு அரசு கடவுள் மறுப்பை தீவிரமாக பின்பற்றி வருகிறது. மத உரிமைகள், மதச் சடங்குகள் செய்யும் உரிமைகள் உள்ளன. ஆனால், வட கொரிய அரசு எந்த மதத்தையும் ஊக்குவிப்பதில்லை என சில தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம், மத தண்டனைகள் உள்ளதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்தவண்ணம் உள்ளன. இந்த நிலையில் தான், பைபிள் வைத்திருந்ததற்காக கைது செய்யப்பட்ட பெற்றோருடன் அவர்களின் 2 வயது குழந்தைக்கும் வடகொரியா அரசு ஆயுள் தண்டனை விதித்திருப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டி உள்ளது.


2 வயது குழந்தைக்கு ஆயுள் தண்டனை:


சர்வதேச அளவில் நிலவும் மத சுதந்திரம் தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில்,  வட கொரியாவில் பிற மதங்களைச் சேர்ந்தவர்களுடன் 70,000 கிறிஸ்தவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. சிறைக்கு அனுப்பப்பட்டவர்களில் இரண்டு வயது ஆண் குழந்தையும் இருந்தது. அவனது பெற்றோரிடம் பைபிள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அவனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. மதப் பழக்கவழக்கங்கள் மற்றும் பைபிளை வைத்திருந்ததற்காக அந்தக் குடும்பம் கைது செய்யப்பட்டுள்ளது. அந்த குழந்தை உட்பட ஒட்டுமொத்த குடும்பமும் 2009-ம் ஆண்டு முதல் ஆயுள் தண்டனை பெற்று அரசியல் சிறை முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த முகாம்களில் சிறை வைக்கப்பட்டிருக்கும் கிறிஸ்தவர்கள் தாங்கள் மோசமான நிலையில் உள்ளதாகவும், பல்வேறு வகையான உடல் ரீதியான துன்புறுத்தல்களை அனுபவித்ததாகவும் விவரித்துள்ளனர். ஷாமனிச ஆதரவாளர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு எதிராக 90 சதவீத ஆவணப்படுத்தப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கு பாதுகாப்பு அமைச்சகம்தான் பொறுப்பு” என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.


”எதெல்லாம் குற்றம்”


வட கொரியாவில் செயல்படும் கொரியா ஃபியூச்சர் என்ற லாப நோக்கற்ற அமைப்பின் அறிக்கையை மேற்கோள் காட்டியுள்ள அமெரிக்கா, வட கொரிய அரசாங்கம் மத நடைமுறைகளில் ஈடுபடும், மதப் பொருட்களை வைத்திருக்கும், மதத் தொடர்பு கொண்ட நபர்களை துன்புறுத்துகிறது. மத நம்பிக்கைகளைப் பகிர்ந்து கொள்பவர்கள் கைது செய்யப்படலாம், காவலில் வைக்கப்படலாம், வேலை செய்ய கட்டாயப்படுத்தப்படலாம், சித்திரவதை செய்யப்படலாம், நியாயமான விசாரணை மறுக்கலாம், நாடு கடத்தப்படலாம், வாழ்வதற்கான உரிமை மறுக்கப்படலாம் அல்லது பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.