வட கொரியா, கொரிய தீபகற்பத்தின் குட்டி நாடு. ஏவுகணை சோதனை, கடுமையான கட்டுப்பாடுகள் என வட கொரியா என்றுமே உலக நாடுகளுக்கு ஒரு அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை அளிக்கும். உலகம் முழுவதும் கொரோனா சுழன்றடித்த நேரத்திலும் வடகொரியாவில் கொரோனா நிலவரம் என்னவென்பதே உலக நாடுகளுக்கு தெரியாது. அங்கு அனைத்துமே மர்மமும், ரகசியமும் தான். எந்த தகவலாக இருந்தாலும் அது அரசின் முழு ஒப்புதல் பெற்றே நாட்டின் எல்லையை தாண்டும். அந்த அளவுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் கொண்ட வடகொரியா தற்போது மக்கள் சிரிக்கக் கூடாது என கட்டளையிட்டுள்ளதாம்.
என்னது? சிரிக்கக் கூடாதா என்று அதிர்ச்சியடைய வேண்டாம். இந்த கட்டளை வாழ்நாள் முழுவதற்கும் அல்ல. 11 நாளைக்குத்தான். வட கொரியாவின் முன்னாள் தலைவர் கிம் ஜாங் இல்லின் 10ம் ஆண்டு நினைவு டிசம்பர் 17ம் தேதி அனுசரிக்கப்படுவதை அடுத்து அந்நாட்டு குடிமக்களுக்கு வடகொரியா அரசு சில கட்டளைகளை அறிவித்துள்ளது. அதன்படி, துக்கத்தை அனுசரிக்கும் விதமாக சந்தோஷத்துக்கான எந்த அறிகுறியும் 11 நாளைக்கு தெரியக் கூடாது என குறிப்பிட்டுள்ளது. அந்த வரிசையில் சிரிக்கக் கூடாது, மது அருந்தக் கூடாது, வீட்டில் ஏதேனும் இறப்பு என்றால் சத்தமிட்டு அழக்கூடாது, பிறந்தநாள் கொண்டாட்டங்கள் கூடாது போன்ற கட்டளைகளை இட்டுள்ளது. அதேபோல் டிசம்பர் 17ம் தேதி பொதுமக்கள் மளிகைக்கடைக்கெல்லாம் சென்று பொருட்கள் வாங்க அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டுகளிலும் இதேபோல் அரசு உத்தரவிட்டிருந்தது எனவும், அதனை மீறி மது அருந்தியோருக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டதையும் அந்நாட்டு அரசு நினைவுகூர்ந்துள்ளது.
கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தும், சர்வாதிகாரத்தாலும் ஆட்சி செய்த கிம் ஜாங் இல் கடந்த 2011ம் ஆண்டு டிசம்பர் 17ம் தேதி மாரடைப்பால் காலமானார். அவருக்கு அப்போது வயது 69. இதனையடுத்து ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதத்தில் 10 நாட்கள் நினைவு தினம் அனுசரிக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு 10வது ஆண்டு நினைவு தினம் என்பதால் அதனை குறிக்கும் விதமாக 11 நாட்கள் நினைவு தின அனுசரிப்பு என அந்நாட்டு அரசு குறிப்பிட்டுள்ளது.
இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் பசி கொடுமையில் வடகொரிய மக்கள் தவித்து வருவது தொடர்கதையாகவே உள்ளது. சீனாவில் கொரோனா பெருந்தொற்று பரவ தொடங்கிய போது, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எனக்கூறி நாட்டின் எல்லைகள் அனைத்தையும் மூடியது வடகொரியா. வர்த்தக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் சீனாவை நாடியுள்ள வடகொரியாவிற்கு, இந்த முடிவு பெரும் பின்னடைவாக அமைந்தது. ஏற்கனவே அமெரிக்கா விதித்த பொருளாதார தடையும், கடந்த ஒரு ஆண்டில் மட்டும் அடுத்தடுத்து நிகழ்ந்த மூன்று இயற்கை பேரிடர்களும் வடகொரியாவின் பொருளாதாரத்தை புரட்டி போட்டுள்ளது. உள்நாட்டு வேளாண் உற்பத்தி எதிர்பார்த்ததை விட பன்மடங்கு குறைந்ததால், உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளதாக வடகொரியா நாட்டில் இருந்து வெளியாகும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால் பொதுமக்களுக்கு சுகாதாரமான உணவு கிடைக்காததோடு, குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.