நார்வே நாட்டை சேர்ந்த எழுத்தாளரான ஜான் ஃபோஸ்-க்கு இந்தாண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. புதுமையான நாடகங்களுக்காகவும் உரைநடைக்காகவும் அவருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை ராயல் ஸ்வீடிஷ் அகாடமி வெளியிட்டுள்ளது.


நார்வே நாட்டு எழுத்தாளர் ஃபோஸ்-க்கு  நோபல் பரிசு அறிவிப்பு:


ஃபோஸ் எழுதி கடந்த 2022ஆம் ஆண்டு வெளியான செப்டாலஜி நாவல் விமர்சன ரீதியாக பெரும் பாராட்டை பெற்றது. அவரின் பெரும்பாலான படைப்புகள் நைனார்ஸ்க் மொழியில்தான் வெளியாகியுள்ளது. நாடகங்கள், நாவல்கள், கவிதைத் தொகுப்புகள், கட்டுரைகள், குழந்தை புத்தகங்கள் மொழிபெயர்ப்புகள் என பல வகை புத்தகங்களை அவர் எழுதியுள்ளார்.


 






கடந்த ஆண்டு, பிரெஞ்சு எழுத்தாளர் அன்னி எர்னாக்ஸுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இந்தாண்டுக்கான நோபல் பரிசு, கடந்த 2ஆம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது. மருத்துவத்துக்கான நோபல் பரிசு கேட்டலின் கரிகோ மற்றும் ட்ரூ வெய்ஸ்மேன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. கொரோனா mRNA தடுப்பூசியை கண்டுபிடித்ததற்காக அவர்களுக்கு  நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.


வேதியியலுக்கான நோபல் பரிசு:


மௌங்கி ஜி. பாவெண்டி, லூயிஸ் ஈ. புரூஸ் மற்றும் அலெக்ஸி ஐ. எகிமோவ் ஆகிய மூவருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. குவாண்டம் புள்ளிகளை கண்டுபிடித்ததற்காக மூவருக்கு நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டது.


இயற்பியலுக்கான நோபல் பரிசு நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. அணுக்கள் மற்றும் மூலக்கூறுகளுக்குள் இருக்கும் எலக்ட்ரான்கள் தொடர்பாக ஆய்வு செய்ததற்காக பியர் அகோஸ்டினி, பேரன்க் கிராஸ், அன்னே எல்'ஹுல்லியர் ஆகிய மூன்று பேருக்கு நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டது.


எலக்ட்ரான்கள் நகரும் செயல்முறைகளை அளவிடப் பயன்படும் ஒளியின் வெளிச்சத்தை உருவாக்குவதற்கான வழியை கண்டுபிடித்ததற்காக இவர்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.



நோபல் பரிசு ஏன் வழங்கப்படுகிறது?


ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த வேதியியலாளர் (டைனமைட்டைக் கண்டுபிடித்தவர்) ஆல்பிரட் நோபல், மனித இனத்திற்கு மிக பெரிய சேவையாற்றிவர்களுக்கு பரிசு வழங்க வேண்டும் என நினைத்தார். அறிவியல் மற்றும் மனிதநேயம் மூலம் சமுதாயத்தை மேம்படுத்தி மக்களுக்கு உதவ முடியும் என்பதில் நம்பிக்கை வைத்திருந்த அவர் நோபல் பரிசை உருவாக்கினார்.


இதன் காரணமாகவே, இது உலகின் பெருமை மிகு பரிசாக கருதபடுகிறது. இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம் மற்றும் அமைதி ஆகிய துறைகளில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு இந்த பரிசு வழங்கப்பட்டு வருகிறது.