2024ஆம் ஆண்டுக்கான வேதியியல் துறை சார் நோபல் பரிசு 3 பேருக்குப் பகிர்ந்து அளிக்கப்படுகிறது. முதல் பாதியை டேவிட் பேக்கருக்கு "கணக்கீட்டு புரத வடிவமைப்பிற்காக" வழங்கவும், மீதி பாதியை டெமிஸ் ஹசாபிஸ் மற்றும் ஜான் எம். ஜம்ப்பர் ஆகியோருக்கு "புரத அமைப்புக் கணிப்புக்காக" வழங்கவும் நோபல் அகாடமி முடிவு செய்துள்ளது.


உலகில் இயற்பியல், வேதியியல், மருத்துவம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் நிபுணத்துவம் வாய்ந்து, மனித இனத்துக்கு நன்மை பயக்கும் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. நோபல் விருதாளர்களுக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிசாக வழங்கப்படுகின்றன. அதாவது இந்திய மதிப்பில் சுமார் 8.40 கோடி ரூபாய் அளிக்கப்படுகிறது. 


இதுவரை 117 முறை நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. நோபல் விருதாளர்கள் அனைவருக்கும் டிசம்பர் 10ஆம் தேதி நோபல் பரிசு வழங்கப்படும். அது நோபல் பரிசை உருவாக்கிய ஆல்ஃபிரெட் நோபலின் நினைவு தினமாகும்.


முன்னதாக 2024ஆம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு விக்டர் ஆம்ப்ரோஸ் மற்றும் கேரி ருவ்குன் ஆகிய இருவருக்கும் அறிவிக்கப்பட்டது. மைக்ரோ ஆர்.என்.ஏ.வின் கண்டுபிடிப்பு மற்றும் அதற்குப் பிந்தைய படியெடுத்தல் மரபணு ஒழுங்குமுறையில் அதன் பங்கு குறித்த ஆராய்ச்சிக்கான நோபல் பரிசு வழங்கப்பட உள்ளது. 


வேதியியல் துறைக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்ட நிலையில், வியாழக் கிழமை அன்று இலக்கியத்துக்கான நோபல் பரிசும் வெள்ளி அன்று அமைதிக்கான நோபல் பரிசும் அறிவிக்கப்பட உள்ளது. அதேபோல அக்டோபர் 14ஆம் தேதி பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.