குவாண்டம் புள்ளிகள் தொடர்பான ஆராய்ச்சிக்கு நோபல் பரிசு:


மௌங்கி ஜி. பாவெண்டி, லூயிஸ் ஈ. புரூஸ் மற்றும் அலெக்ஸி ஐ. எகிமோவ் ஆகிய மூவருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. குவாண்டம் புள்ளிகளை கண்டுபிடித்ததற்காக மூவருக்கு நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.


குவாண்டம் புள்ளிகளுக்கு என தனித்துவமான பண்புகள் உள்ளன. தொலைக்காட்சித் திரைகள் மற்றும் எல்இடி விளக்குகளிலிருந்து ஒளியைப் பரப்புவது குவாண்டம் புள்ளிகளே ஆகும். இவை ரசாயன எதிர்வினைகளை ஊக்குவிக்கின்றன. அறுவை சிகிச்சையின்போது, திசுக்களை ஒளிரச் செய்யும் இதன் தெளிவான ஒளி பயன்படுகிறது.


நானோ தொழில்நுட்பத்தை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து சென்ற ஆராய்ச்சி:


வண்ண ஒளியை உருவாக்குவதற்கு குவாண்டம் புள்ளிகளையே ஆராய்ச்சியாளர்கள் முதன்மையாக பயன்படுத்துகின்றனர். நெகிழ்வான மின்னணு கருவிகள், மிக சிறிய சென்சார்கள், மெலிதான சூரிய மின்கலங்கள் மற்றும் என்கிரிப்டட் குவாண்டம் சிக்னலுக்கு குவாண்டம் புள்ளிகள் எதிர்காலத்தில் பங்களிக்கக்கூடும் என்றும் விஞ்ஞானிகள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.


இன்றைய உலகில் நானோ தொழில்நுட்பத்தின் முக்கிய அங்கமாக குவாண்டம் புள்ளிகள் உள்ளது. நோபல் பரிசை பெற்ற மௌங்கி ஜி. பாவெண்டி, லூயிஸ் ஈ. புரூஸ், அலெக்ஸி ஐ. எகிமோவ் ஆகிய மூவரும் நானோ தொடர்பான ஆராய்ச்சியில் முன்னோடிகளாக உள்ளனர். கடந்த 1980களின் முற்பகுதியில் லூயிஸ் புரூஸ் மற்றும் அலெக்ஸி எகிமோவ் ஆகியோர் தனித்தனியே குவாண்டம் புள்ளிகளை உருவாக்கினர்.


 




இயற்பியலுக்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டது. அணுக்கள் மற்றும் மூலக்கூறுகளுக்குள் இருக்கும் எலக்ட்ரான்கள் தொடர்பாக ஆய்வு செய்ததற்காக பியர் அகோஸ்டினி, பேரன்க் கிராஸ், அன்னே எல்'ஹுல்லியர் ஆகிய மூன்று பேருக்கு நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டது.


எலக்ட்ரான்கள் நகரும் செயல்முறைகளை அளவிடப் பயன்படும் ஒளியின் வெளிச்சத்தை உருவாக்குவதற்கான வழியை கண்டுபிடித்ததற்காக இவர்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.


நோபல் பரிசு ஏன் வழங்கப்படுகிறது?


ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த வேதியியலாளர் (டைனமைட்டைக் கண்டுபிடித்தவர்) ஆல்பிரட் நோபல், மனித இனத்திற்கு மிக பெரிய சேவையாற்றிவர்களுக்கு பரிசு வழங்க வேண்டும் என நினைத்தார். அறிவியல் மற்றும் மனிதநேயம் மூலம் சமுதாயத்தை மேம்படுத்தி மக்களுக்கு உதவ முடியும் என்பதில் நம்பிக்கை வைத்திருந்த அவர் நோபல் பரிசை உருவாக்கினார்.


இதன் காரணமாகவே, இது உலகின் பெருமை மிகு பரிசாக கருதபடுகிறது. இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம் மற்றும் அமைதி ஆகிய துறைகளில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு இந்த பரிசு வழங்கப்பட்டு வருகிறது.